LATEST NEWS
“ஆசிய கண்டமே அதிர்ந்துபோய்விட்டது” அப்படி ஒரு அரசியல் அறிவிப்பு… நடிகர் ராகவா லாரன்ஸை கலாய்த்து தள்ளிய புளூ சட்டை மாறன்…!!
நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்ததோடு, தான் எந்தக் கட்சியில் இணைய வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அண்மையில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சியின் சார்பாக திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்ற யூகங்கள் பரவலாக எழுந்தன. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மீண்டும் ஒரு விளக்க வீடியோவை லாரன்ஸ் வெளியிட்டுள்ளார்.
அந்த விளக்க வீடியோவில், திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவது தர்மமாக இருக்காது என்று லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார். பல ஆண்டுகளாக நடிகர் விஜய்க்காக உழைத்த தொண்டர்கள் இருக்கும்போது, தான் கட்சியில் சேர்ந்த உடனே தேர்தல் சீட் வாங்குவது முறையல்ல என்றும், முதலில் ஒரு சாதாரண உறுப்பினராக உழைத்த பின்னரே பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், திருச்சி கிழக்கில் போட்டியிட மாட்டேன் என்று கூறியதற்குக் காரணம் வேறு எந்தத் தொகுதியிலும் போட்டியிட மாட்டேன் என்பது அர்த்தமல்ல என்றும், இன்னும் இரண்டு திரைப்படங்களை முடித்த பிறகு தான் இணையப் போகும் அரசியல் கட்சி எது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்நிலையில் ராகவா லாரன்ஸின் இந்த அரசியல் நகர்வுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வரும் நிலையில், பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் லாரன்ஸை வம்புக்கு இழுத்துள்ளார். லாரன்ஸின் அரசியல் அறிவிப்பால் ஒட்டுமொத்த ஆசியக் கண்டமே அதிர்ச்சியடைந்துவிட்டது என்ற தொனியில், “ஆசிய கண்டம் அதிர்ச்சி..” என்று குறிப்பிட்டு நகைச்சுவையாகவும் நக்கல் செய்யும் விதமாகவும் ஒரு பதிவை வெளியிட்டு அவர் ராகவா லாரன்ஸைக் கலாய்த்துள்ளார்.
