LATEST NEWS
தவெக ஆட்சியில் அமைச்சர் பதவி.. திமுகவுடன் ரகசிய உறவு.. டபுள் கேம் ஆடும் திருமாவளவன்.. அதிரும் அறிவாலயம்…!!
தவெக அரசுடன் அமைச்சரவையில் பங்கேற்றிருந்தாலும், விசிக இன்னும் முழுமையாக தவெக கூட்டணியில் இணைந்துவிடவில்லை எனவும், திமுகவுடனான அரசியல் உறவு தொடர்கிறது எனவும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசியிருப்பது தமிழக அரசியலில் புதிய விவாதங்களையும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக ஆட்சியை அமைத்ததைத் தொடர்ந்து, முதலில் வெளியில் இருந்து ஆதரவு அளித்த விசிக பின்னர் அமைச்சரவையிலும் இடம்பெற்றது. இருப்பினும், தவெக தலைமையிலான கூட்டணி இன்னும் முழுமையாக உருவாகவில்லை என்றும், எங்களின் அரசியல் முடிவுகள் அனைத்தும் திமுகவுடன் தொடர்ந்து பகிரப்பட்டு வருவதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டை மிகக் கடுமையாக விசிக விமர்சித்திருந்த நிலையில், தற்போது அதே தவெக அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றன. மேலும், விசிகவின் அடிமட்டத் தொண்டர்களில் ஒரு பகுதியினர் தவெக கூட்டணியை வரவேற்றாலும், மூத்த நிர்வாகிகள் சிலர் திமுக உறவையே தொடர விரும்புவதால் கட்சிக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அதேசமயம், விசிக கூட்டணியை விட்டு வெளியேறிய பின் அதன் முக்கிய நிர்வாகிகளைத் தன் பக்கம் இழுக்க திமுக முயற்சி செய்வதாகக் கூறப்படுவதால், திமுகவை முழுமையாக எதிர்க்கவும் திருமாவளவன் தயங்குவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
விசிகவின் இந்த இரட்டை அணுகுமுறையானது, ஒருபுறம் ஆளுங்கட்சியின் அதிகாரப் பலன்களையும், மறுபுறம் திமுக போன்ற கட்சிகளுடனான எதிர்காலக் கூட்டணி வாய்ப்புகளையும் திறந்த நிலையில் வைப்பதற்கான ஒரு அரசியல் தந்திரமாகவே பார்க்கப்படுகிறது. விஜய்யை முழுமையாக ஆதரித்தால் பதவிக்காக நிலைப்பாட்டை மாற்றிவிட்டார் என்ற விமர்சனமும், திமுகவை முழுமையாக எதிர்த்தால் எதிர்கால வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்ற அச்சமுமே இதற்குக் காரணம். வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களின் போதே விசிகவின் இறுதி அரசியல் பாதை எது என்பது தெளிவாகத் தெரியவரும்.
