LATEST NEWS
“கைதாகும் திருமா..?” திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சகட்ட பரபரப்பு… பேரணிக்கு அனுமதி மறுத்த போலீஸ்… அடுத்து நடக்கப் போவது என்ன..?
மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்கவிருந்த மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் அமைதிப் பேரணிக்குக் காவல்துறை அதிரடியாக அனுமதி மறுத்துள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதி காவல்துறை இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்தும், மதுரை மண்ணில் மத நல்லிணக்கம் மற்றும் அமைதியை வலியுறுத்தியும் இந்தப் பேரணியை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதில் தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் பெருமளவில் திரண்டு பேரணியாகச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், இந்த அமைதிப் பேரணிக்குக் காவல்துறை தரப்பில் இருந்து முறையான அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையின் தடையை மீறிப் பேரணி நடத்த முயன்றாலோ அல்லது அதில் பங்கேற்றாலோ, திருமாவளவன் உள்ளிட்டோர் மீது உடனடியாகக் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது; இதனால் மதுரையில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
