LATEST NEWS
அய்யோ கொடுமையே.. DJ சத்தத்தால் நேர்ந்த கொடூரம்.. கணேச விசர்ஜன ஊர்வலத்தில் சுருண்டு விழுந்து B.Sc மாணவி பரிதாப பலி..! கதறும் பெற்றோர்..!!
மத்திய பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜெ.ஹெச் கல்லூரியின் கணேச விசர்ஜன ஊர்வலத்தின் போது, 17 வயதான பிரதீக்ஷா வர்மா என்ற மாணவி திடீரென மயங்கி விழுந்தார். வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் 10 மணிக்கு இடையே இச்சம்பவம் நடந்துள்ளது. அக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி படித்து வந்த இவர், ஷாஹ்பூர் சுஹாக்பூர் தானா பகுதியைச் சேர்ந்த நிதேஷ் வர்மாவின் மகள் ஆவார். தற்போது பேதுலின் விகாஸ் நகரில் வாடகைக்கு அறை எடுத்து தங்கிப் படித்து வந்த இவரை, அருகில் இருந்தவர்கள் உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இச்சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்கு விரைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஊர்வலத்தில் இயக்கப்பட்ட அசாத்தியமான உரத்த டிஜே ஒலியே இச்சம்பவத்திற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளனர். மிகக் கடுமையான ஒலி அளவின் காரணமாகவே மாணவியின் இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே அவரது இறப்பிற்கான சரியான காரணம் தெரியவரும் என மருத்துவர்களும் காவல் துறையினரும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உடற்கூறாய்வு நடைமுறைகள் முடிந்ததும் மாணவியின் உடல் பெற்றாரிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஊர்வலத்தில் பயன்படுத்தப்பட்ட டிஜே ஒலி அமைப்பின் ஒலி அளவு குறித்து தொழில்நுட்ப விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை விடக் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் விதிகளை மீறியிருந்தாலோ, சம்பந்தப்பட்ட விழா அமைப்பாளர்கள் மற்றும் டிஜே உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
