LATEST NEWS
அடச்சீ.. பணத்தை வாங்கிட்டு இப்படியா பண்றது..? ரூ.5 லட்சம் கடனை கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கடைசி நொடியில் காத்த வாட்ஸ்அப் லொகேஷன்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம், மங்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 லட்சம் கடனாக பெற்றுள்ளார். ஆனால், நீண்ட காலமாகியும் அந்த பணத்தை அவர் திருப்பி செலுத்தவில்லை. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெங்கடேஷை அவரது வீட்டுக்கு வரவழைத்து அந்த பெண், கடன் தொகையை திருப்பி செலுத்துவது தொடர்பாக பத்திரத்தில் எழுதி வாங்கியுள்ளார். அதில், மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வட்டியாக வழங்க வேண்டும் என்றும், ஓராண்டுக்குள் முழு கடன் தொகையையும் செலுத்த வேண்டும் என்றும் எழுதியிருந்தது.
இந்த நிலையில், வட்டிப் பணத்தை கேட்பதற்காக அந்த பெண் வெங்கடேஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, அவரை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு வரவழைத்த வெங்கடேஷ் மற்றும் அவரது உறவினர் இளங்கோ ஆகிய இருவரும், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளனர். மயக்கம் ஏற்படுவதற்கு முன்பாக சுதாரித்து கொண்ட அந்த பெண், தனது பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், தான் இருக்கும் இடத்தை கண்டறியும் வகையில் வாட்ஸ்அப் மூலம் லொகேஷனையும் அனுப்பியுள்ளார். இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து சென்று, அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக பெண்ணை மீட்டனர்.
இதுகுறித்து பர்கூர் போலீசாரிடம் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வெங்கடேஷ் மற்றும் இளங்கோ இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
