LATEST NEWS
“ரஷ்யாவுக்கு பாகிஸ்தான் போட்ட திடீர் செக்..! கடைசி நேரத்தில் உஷாரான புடின் நிறுவனம்… பின்னணி என்ன..?!”
பங்களாதேஷ் நாட்டின் முதலாவது அணுமின் நிலையமான ‘ரூப்பூர் அணுமின் நிலையத்திற்கு’ தேவையான இரண்டாம் கட்ட அணு எரிபொருளைச் சுமந்து கொண்டு ரஷியாவிலிருந்து புறப்பட்ட சிறப்பு சரக்கு விமானத்திற்குத் தன் நாட்டு வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி மறுத்து பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. பங்களாதேஷில் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், செப்டம்பர் 24-ஆம் தேதியன்று வந்தடைய வேண்டிய இந்த அணு எரிபொருள் சரக்கு, பாகிஸ்தானின் கடைசி நேர அனுமதியின்மையால் குறித்த நேரத்தில் சென்றடைய முடியாமல் போயுள்ளது.
ரஷியாவின் ‘ரோசாட்டம்’ நிறுவனம் தயாரித்த இந்த அணு எரிபொருள் அஜர்பைஜான், கஜகஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா வழியாகத் டாக்காவை வந்தடையத் திட்டமிடப்பட்டிருந்தது. தொழில்நுட்ப மற்றும் நடைமுறை சிக்கல்கள் காரணத்தினாலேயே அனுமதி தாமதமானதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ள நிலையில், இதற்கான சரியான காரணத்தைப் பாகிஸ்தான் இதுவரை தெளிவாகத் தெரிவிக்கவில்லை என பங்களாதேஷ் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தானுடன் நல்உறவை ஏற்படுத்த பங்களாதேஷ் முயன்று வந்த நிலையில், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை மிகப்பெரிய ராஜதந்திர பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானின் தடையைத் தொடர்ந்து, ரஷ்யாவின் ‘ரோசாட்டம்’ நிறுவனம் தற்போது மாற்றுப் பாதை வழியாக அணு எரிபொருளை பங்களாதேஷிற்குப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் மாற்றுப் பாதையில் இந்த எரிபொருள் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டு, டிசம்பர் மாதத்திற்குள் ஏழு தனித்தனி சரக்கு விமானங்கள் மூலம் மீதமுள்ள எரிபொருட்கள் அனைத்தும் டாக்காவை வந்தடையும் என்றும், இதனால் ஒட்டுமொத்த அட்டவணை பாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
