LATEST NEWS
அய்யோ கடவுளே..! தந்தையின் கண் முன்னே மகனைக் கடித்துக் குதறிய புலி.. டிக்டாக் மோகத்தால் பறிபோன 19 வயது இளைஞனின் உயிர்… பதறவைக்கும் சம்பவம்..!!
பாகிஸ்தானின் லாகூர் நகரில் டிக்டாக் வீடியோ எடுப்பதற்காக கூண்டில் இருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி தாக்கியதில் 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் டிக்டாக் பிரபலம் நோமான் ஹசன் வீடியோ ஷூட்டிங் செய்யச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது வீடியோவுக்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே வரவழைக்கப்பட்டது. அதே பண்ணை வீட்டில் வேலை செய்து வந்த 19 வயதான தல்ஹா என்பவரும் அங்கு இருந்த நிலையில், திடீரென ஆக்ரோஷமடைந்த புலி தல்ஹா மீது பாய்ந்து தாக்குதல் நடத்தியது. படுகாயமடைந்த தல்ஹாவை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்தக் கோரச் சம்பவம் நடந்தபோது, தல்ஹாவின் தந்தையும் அவனது சகோதரரான ஹாஷிமும் அதே பண்ணை வீட்டில் தான் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் தனது கண் முன்னேயே மகன் தாக்கப்படுவதைப் பார்த்து கதறித் துடித்தனர். இந்த விபத்து நடந்தவுடன் விஷயத்தை மறைக்க முயன்றவர்கள், தல்ஹாவை நாய் கடித்ததாகப் பொய் கூறினார்கள். ஆனால், காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திய பிறகு, தல்ஹாவின் உடலில் இருந்த காயங்கள் புலியின் தாக்குதலால் ஏற்பட்டவை என்பது உறுதியானது. இதனையடுத்து, தல்ஹாவின் தந்தையின் புகாரின் அடிப்படையில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பண்ணை வீட்டின் உரிமையாளர் பயாஸ் என்ற ஃபைஜி மற்றும் டிக்டாக் பிரபலம் நோமான் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அந்தப் பண்ணை வீட்டுக்கான விலங்கு வளர்ப்பு உரிமம் முன்பே காலாவதியாகிவிட்டது தெரியவந்தது. மேலும், அங்கு சோதனை நடத்தி 33 சிங்கங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்; தாக்குதல் நடத்திய பெண் புலி வனவிலங்குத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆபத்தான விலங்குகளுடன் முன்பு பலமுறை ஸ்டண்ட் செய்து சர்ச்சையில் சிக்கியிருந்த நோமான் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
