LATEST NEWS
பாமாயில் கொள்முதலில் ரூ.600 கோடி ஊழல்..? உண்மைகளை மறைக்கும் டூல்கிட்ஸ்… – புள்ளிவிவரங்களுடன் உதயநிதி அதிரடி அறிக்கை..!!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தற்போதைய தவெக அரசை விமர்சித்து, மிகக் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ரேஷன் துவரம் பருப்பு கொள்முதல் விலையில் அரசுக்கு ரூ.750 கோடி மிச்சம் என்று ஆளுங்கட்சியின் ‘டூல்கிட்ஸ்’ (Toolkits) பொய் பரப்புரைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் கிலோ ரூ.109-க்கு பருப்பு வாங்கியதாகக் கூறப்படும் செய்தியை மறுத்துள்ள அவர், தற்போதைய தவெக ஆட்சியை “கோமாளி அரசு” என்றும் சாடியுள்ளார்.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில்தான் துவரம் பருப்பின் கொள்முதல் விலை மிகச் சிறப்பாகக் குறைக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்களையும் உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் முன்வைத்துள்ளார். கடந்த 2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த துவரம் பருப்பின் விலையை, முந்தைய திமுக அரசு தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் கடந்த பிப்ரவரியில் ரூ.77.99 ஆகக் குறைத்துக் காட்டியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், தற்போதைய தவெக ஆட்சியில் ரேஷன் பாமாயில் கொள்முதலில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாகப் பகிரங்கமான ஊழல் குற்றச்சாட்டையும் அவர் எழுப்பியுள்ளார். திமுக ஆட்சியில் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட பாமாயிலை விட, தவெக அரசு கடந்த 3 மாதங்களில் லிட்டருக்கு ரூ.11 கூடுதலாகக் கொடுத்து வாங்கியுள்ளதாகவும், இதன் மூலம் ரூ.600 கோடிக்கும் மேல் பெரிய ஊழல் நடந்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். எனவே, அவதூறுகளைப் பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வால் தவிக்கும் மக்களின் துயர் துடைக்க இந்த ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
