CRIME
அய்யோ கடவுளே.. அடுத்தடுத்து வெடித்துச் சிதறிய 12 புதிய ஏசி பேருந்துகள்.. தீப்பிழம்பாய் மாறிய டெப்போ.. அலறியடித்து ஓடிய மக்கள்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
மும்பை சயான் பகுதியில் உள்ள அனிக் பெஸ்ட்பேருந்து பணிமனையில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 12 புதிய ஏசி சிஎன்ஜி பேருந்துகள் தீயில் கருகி முற்றிலும் சாம்பலாகின. மாலை 5:45 மணியளவில் பேருந்து நிறுத்த முற்றத்தில் திடீரெனப் பிடித்த தீ, அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருந்த மற்ற பேருந்துகளுக்கும் மிக வேகமாகப் பரவியதால் அந்தப் பகுதியே பெரும் புகைமண்டலமாக மாறியது. சம்பவ இடத்திலிருந்து வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இத்தகவல் அறிந்ததும் 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 5 தண்ணீர் லாரிகளுடன் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் இரண்டரை மணி நேரம் தீவிரமாகப் போராடி, இரவு 8:20 மணியளவில் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.
பாதிக்கப்பட்ட இந்த சொகுசுப் பேருந்துகள் அனைத்தும் ‘டாகா குரூப்’ என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானவை என்பதும், ‘பெஸ்ட்’ பொதுப் போக்குவரத்துப் பிரிவில் சமீபத்தில் இணைப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட புதிய வாகனங்களின் ஒரு பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாகப் பழைய பேருந்துகளுக்குப் பதிலாக 140-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்து நேர்ந்துள்ளது. புதிய சிஎன்ஜி பேருந்துகளில் தீப்பிடித்ததற்கான உண்மையான காரணம் என்ன மற்றும் ஒரு பேருந்தில் பற்றிய தீ இவ்வளவு விரைவாக மற்ற பேருந்துகளுக்கு எவ்வாறு பரவியது என்பது குறித்து தீயணைப்புத் துறையினரும் அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
