CRIME
அதிர்ச்சி.. சனிக்கிழமை இரவு பார்ட்டி.. ஞாயிறு காலை ஜிம் ட்ரைனருக்கு நேர்ந்த விபரீதம்.. சக ஊழியர்களே எமனாக மாறிய அவலம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், சொகுசு குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில், 25 வயது இளம் உடற்பயிற்சி பயிற்சியாளர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு எலகங்க ஜக்கூர் லேஅவுட் பகுதியைச் சேர்ந்த நந்தன் (25) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். இவர் சகாகரா நகரிலுள்ள ‘மேசிவ் ஜிம்’ என்ற உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். இக்கொலை வழக்கு தொடர்பாக அம்ருதாஹள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நந்தனின் சக ஊழியர்களான விஸ்வநாதா, சரத், நிஷாந்த் மற்றும் அவர்களுக்குப் பயிற்சி வாடிக்கையாளரான அனுஷ் ஆகிய நான்கு பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
போலீஸ் விசாரணையின்படி, சனிக்கிழமை மாலை அந்த உடற்பயிற்சி கூடத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. விழா முடிந்த பிறகு, நந்தன், விஸ்வநாதா, சரத் மற்றும் நிஷாந்த் ஆகிய நான்கு பயிற்சியாளர்களும் தங்களது வாடிக்கையாளரான அனுஷின் கெம்பாபுராவில் உள்ள ‘பிரெஸ்டிஜ் மிஸ்டி’ அடுக்குமாடி குடியிருப்பிற்கு இரவு தங்குவதற்காகச் சென்றுள்ளனர். அங்கு ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணி முதல் 7:30 மணிக்குள் இவர்களுக்கு இடையே திடீரென தனிப்பட்ட காரணங்களுக்காக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் சில நிமிடங்களில் பயங்கர மோதலாக மாறியதில், நந்தன் சக ஊழியர்களால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டார். இந்த மோதலில் முதன்மைக் குற்றவாளியான விஸ்வநாதா மற்றும் சரத் ஆகிய இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
பலத்த காயமடைந்த நந்தன் உடனடியாக ஹெப்பாலில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நந்தனின் தாயார் மஞ்சுளா அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இதுகுறித்து பெங்களூரு வடகிழக்கு பிரிவு துணை போலீஸ் கமிஷனர் மிதுன் குமார் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் தனிப்பட்ட பகை காரணமாகவே இந்தக் கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டார். சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்பத் தரவுகளைக் கைப்பற்றியுள்ள போலீஸார், பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் நான்கு பேரையும் காவலில் எடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
