CRIME
அதிகாலையிலே அதிர்ச்சி.. சக்கரங்கள் கழன்று தலைகீழாக உருண்ட கார்.. நண்பர்களுடன் மகிழ்ச்சியாகச் சுற்றுலா சென்ற 2 கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த கொடூர கதி.. அதிர்ச்சி பின்னணி..!!
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் உள்ள நெலமங்களா அருகே, நவம்பர் 17-ஆம் தேதி அதிகாலை நிலவிய அடர்ந்த பனிமூட்டத்தால் நிகழ்ந்த கோர கார் விபத்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சப்தகிரி பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த 6 மாணவர்கள், ஹுட்ரிதுர்கா பகுதிக்குச் சுற்றுலா செல்வதற்காக அதிகாலையில் காரில் புறப்பட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலை 75-ல் குடேமரனஹள்ளி பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, கடும் பனிமூட்டம் காரணமாகச் சாலை தெளிவாகத் தெரியாததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் இரண்டு முறை தலைகீழாக உருண்டு சக்கரங்கள் கழன்று முற்றிலுமாக நொறுங்கியதில், துமகூருவைச் சேர்ந்த 19 வயது மாணவிகளான ஜானவி மற்றும் வைஷ்ணவி ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தக் கோர விபத்தில் படுகாயமடைந்த ககன், ஜஸ்வந்த், ஹர்ஷினி எஸ் மற்றும் ஹர்ஷினி ஜி ஆகிய நான்கு மாணவர்களும் மீட்கப்பட்டு நெலமங்களா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து குடுரு காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் பனிமூட்டமா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவா எனத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், அதிகாலைப் பயணங்களின் போது பனிமூட்டம் அதிகமாக இருந்தால் வாகனத்தின் வேகத்தைக் குறைப்பது, ‘லோ-பீம்’ விளக்குகளைப் பயன்படுத்துவது மற்றும் ஓட்டுநர்கள் போதிய ஓய்வெடுப்பது போன்ற சாலைப் பாதுகாப்பு விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதை இத்துயரச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
