LATEST NEWS
“வாக்குறுதி என்ன ஆச்சு..?” விஜய்யின் மாஸ் இமேஜை டேமேஜ் செய்யும் ஒரே விவகாரம்..! தவெக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்திய மின்வெட்டு! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!
தமிழகத்தில் விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்த சில மாதங்களிலேயே, 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் மற்றும் 10 ஆயிரம் அதிக சுமை கொண்ட மின் வழித்தடங்கள் மேம்பாடு போன்ற தேர்தல் வாக்குறுதிகளுக்கு மாறாக, பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு புகார்கள் எழத் தொடங்கின. மே மற்றும் ஜூன் மாதங்களில் சென்னை உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட மின்தடைகளுக்கு உள்ளூர் தொழில்நுட்பக் கோளாறுகள், மின் தேவை அதிகரிப்பு, கேபிள் மற்றும் மின்மாற்றி சுமை, மற்றும் சில இடங்களில் உள்கட்டமைப்புகள் சேதப்படுத்தப்பட்டது ஆகியவையே காரணம் என மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்தார். இருப்பினும், சிறு தொழில்கள், விவசாயம் மற்றும் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன.
இதையடுத்து ஜூன் 10-ம் தேதி, திட்டமிட்ட மின்தடையை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்றும், அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்கக்கூடாது என்றும் மின்வாரியம் உத்தரவிட்டது. ஆனால் செப்டம்பர் மாதத்திலும் காற்றாலை மின் உற்பத்தி குறைவு காரணமாக மின் பற்றாக்குறை ஏற்பட்டு, புகார்கள் மீண்டும் அதிகரித்தன. இதற்காக கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையிலும், குறைந்த மின்னழுத்தம் மற்றும் தொடர் மின்வெட்டைக் கண்டித்து செப்டம்பர் 18-ம் தேதி வியாசர்பாடியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், மதுராந்தகம், மதுரை மற்றும் தாராபுரத்தில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், செங்கோட்டையன் ஆகிய அமைச்சர்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சிகளிலேயே மின்சாரம் தடைபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சிகளின் பல்வேறு விமர்சனங்களையும் தாண்டி தவெக ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், கடந்த 4-5 மாத ஆட்சியில் மக்களிடையே ஆளும் கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திய முதன்மைப் பிரச்சினையாக இந்த மின்வெட்டே உருவெடுத்துள்ளது. இந்நிலையில் வெளியில் இருந்து 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ள சூழலில், அக்டோபர் 07-ம் நாளான இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய 3,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை என்றும், அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மின் தேவை அதிகரிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையாகவே மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.
