LATEST NEWS
உச்சகட்ட பதற்றம்..! “யார் இந்த எழுத்தாளர் திரிஷா விஜய்?” 50 கோடி பெரியார் நூலக ஊழலில் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் எழுப்பிய அதிரடி கேள்வி..!!
கோவை காந்திபுரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலக நூலகத்தின் புத்தகக் கொள்முதல் விவகாரம், தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நூலகத்திற்காக அகல்விளக்கு பதிப்பகம் சார்பில் வழங்கப்பட்டுள்ள நூல்களில் பெரும் குளறுபடிகள் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சூழலில், நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் புத்தக ஆசிரியர்களின் பெயர்கள் குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் தமிழ் அறிவுச் சூழலுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி என்றும், இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சாட்டை துரைமுருகன் வெளியிட்டுள்ள காணொளியில், குளறுபடியான தகவல்களுடன் உள்ள பல புத்தகங்களின் ஆசிரியர் பெயர்கள் விஜய் பாலு, விஜய் செல்வம், சிமோகா விஜய், விஜய் ஆதித்தன் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கியப் பிரமுகர்களின் பெயர்களைப் பிரதிபலிப்பது போல் அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, “யார் இந்த எழுத்தாளர் திரிஷா விஜய்?” என்ற கேள்வியையும், முழுக்க முழுக்கத் தவறான வரலாற்றுத் தகவல்களுடன் இந்த நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்கும், தவெக தலைவர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22 அன்று இந்த நூல்களுக்கு முத்திரையிடப்பட்டிருப்பது தற்செயலானதா எனச் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த மெகா ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாகத் திமுக மற்றும் தவெக ஆகிய இரு தரப்பினரும் மாறி மாறிப் பழிசுமத்தி வருகின்றனர். தவெக தொண்டர்கள், தங்கள் தலைவர் விஜய்யின் பெயரைக் கெடுப்பதற்காகவே திமுக இந்தச் சதியைச் செய்துள்ளதாகக் கூறுகின்றனர். மறுபுறம் திமுக தரப்போ, ஜூலை மாதத்திற்குப் பிறகுதான் தவெக நிர்வாகத்தின் கீழ் அகல்விளக்கு பதிப்பகப் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளதால் இது தவெக செய்த ஊழல் என மறுப்புத் தெரிவித்து வருகிறது. சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த புத்தகக் கொள்முதல் விவகாரத்தில், தரம் குறைந்த நூல்கள் இடம்பெற்றிருப்பது தமிழ் சமூக இளைஞர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாக எழுத்தாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
