LATEST NEWS
சட்டசபையை இழுத்து மூடி வெல்டிங் வைப்பேன்… விஜய்க்கு ஒரு நியாயம்… சீமானுக்கு ஒரு நியாயமா..? சிக்கலில் சாட்டை துரைமுருகன்.. நெட்டிசன்கள் ‘செக்’..!!
தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலில், சட்டமன்றத்தில் எழுந்த விவாதங்கள் மற்றும் விமர்சனங்களைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசையும் சட்டசபையையும் விமர்சித்துப்பேசியதற்காகவே அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ‘சாட்டை’ துரைமுருகன் வெளியிட்ட வீடியோ ஒன்று, அவருக்கு எதிர்பாராத விதமாகப் பெரும் அரசியல் சிக்கலை உருவாக்கியுள்ளது.
அந்த வீடியோவில் பேசிய சாட்டை துரைமுருகன், “சட்டசபையைப் பூட்டினால் எலும்பை உடைப்பேன் என்றுதானே மார்க்கண்டேயன் கூறினார்? ‘சட்டசபையைப் பூட்டுவேன்’ என்று முதலமைச்சர் விஜய் பேசலாமா? இதையெல்லாம் பொதுவான நபர்கள் கண்டிக்க வேண்டாமா?” என மார்க்கண்டேயனுக்கு ஆதரவாகப் பரிந்து பேசி இருந்தார். முதலமைச்சர் விஜய்யின் பேச்சை விமர்சித்து துரைமுருகன் வெளியிட்ட இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பழைய காணொளி ஒன்றை உடனடியாகத் தோண்டி எடுத்து பதிலடி கொடுக்கத் தொடங்கினர்.
அந்தப் பழைய காணொளியில் சீமான், “நான் முதலமைச்சராக வந்த பிறகு ஆளுநர் மசோதாவில் கையெழுத்துப் போட மாட்டேன் என்று கூறினால், சட்டசபையை இழுத்து மூடி வெல்டிங் வைத்து விடுவேன்! அதுமட்டுமல்லாமல், ஒரு நாள் முழுவதும் மத்திய அரசு அலுவலகத்தைப் பூட்டி சாவியைக் கைப்பற்றி எடுத்து வந்து விடுவேன்!” என்று மிகக் காரசாரமாகப் பேசியிருந்தார். தற்போது நெட்டிசன்கள், சாட்டை துரைமுருகன் பேசிய புதிய வீடியோவையும், சீமான் “சட்டசபைக்கு வெல்டிங் வைப்பேன்” என்று பேசிய பழைய வீடியோவையும் இணைத்து ஒரே காணொளியாக எடிட் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
“முதலமைச்சர் விஜய் பேசினால் தவறு, அதையே உங்கள் அண்ணன் சீமான் பேசினால் மட்டும் சரியா? என்ன ஒரு இரட்டை வேடம்!” என்று கேள்வி எழுப்பி நெட்டிசன்கள் சாட்டை துரைமுருகனையும் நாம் தமிழர் கட்சியினரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த எடிட் செய்யப்பட்ட காணொளி தற்போது எக்ஸ் உள்ளிட்ட பிற சமூக வலைதள தளங்களில் காட்டுத்தீ போலப் பரவி, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
