LATEST NEWS
“நடுராத்திரியில் பற்றி எரிந்த கார்..” தீயை அணைத்து உள்ளே பார்த்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…உறைய வைக்கும் பின்னணி..!!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள லாங்லியில் உள்ள ராலின்சன் கிரெசென்ட் பகுதியில் கடந்த அக்டோபர் 29 அன்று இரவு 10:30 மணியளவில் கார் ஒன்று தீப்பற்றி எரிவதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தபோது, காருக்குள் எரிந்த நிலையில் மனித உடல் இருப்பதைக் கண்டறிந்தனர். முதலில் லாங்லி காவல்துறை தடையங்களைச் சேகரித்து விசாரணையைத் தொடங்கிய நிலையில், வழக்கின் தீவிரம் கருதி இந்த விசாரணை கனடா ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழுவிடம் மாற்றப்பட்டது.
எரிந்த காரில் கண்டெடுக்கப்பட்ட சடலம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் வசித்து வந்த 25 வயது இந்தியரான துஷார் சர்மா உடையது என IHIT உறுதிப்படுத்தியுள்ளது. துஷார் சர்மா மீது கனடாவில் எந்தவொரு குற்றப் பின்னணியும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் இறப்பதற்கு முன்பு அவருடைய பின்னணி மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்த விவரங்களை அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஆதாரங்களை அழிப்பதற்காகக் கார் தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கலாம் என்றும், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையாக இருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையில், இந்தச் சம்பவத்திற்கு வான்கூவரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
