LATEST NEWS
“நிம்மதியா வாழ விடுங்க..” பெற்றோருக்குப் பிடிக்காட்டி சொந்த பிள்ளைகளே வீட்டுல இருக்க முடியாது.. 85 வயது முதியவருக்காக நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு..!!
பெற்றோருக்குப் பிடிக்கவில்லை என்றால், அவர்களது சொந்த வீட்டில் பிள்ளைகள் தொடர்ந்து வசிக்க உரிமை கோர முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 85 வயது முதியவரின் வீட்டில் வசித்து வந்த அவரது மூத்த மகனும் மருமகளும் 4 வாரங்களுக்குள் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதியவர்கள் நிம்மதியாகவும் கண்ணியத்துடனும் வாழ்வதை உறுதி செய்வது அவசியம் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த இந்த முதியவர், 1980-ம் ஆண்டு டெல்லி வளர்ச்சி ஆணையத்திடமிருந்து வீட்டை வாங்கியுள்ளார். பின்னர் 2000-ம் ஆண்டு அந்த வீட்டை முழு உரிமைச் சொத்தாகத் தனது பெயருக்கு மாற்றியுள்ளார். அவரது மூத்த மகனும் மருமகளும் 2003-ம் ஆண்டு திருமணத்திற்குப் பிறகு அந்த வீட்டில் வசித்து வந்தனர். 2008-ம் ஆண்டு இளைய மகனுக்குத் திருமணமான பிறகு, மூத்த மகனையும் மருமகளையும் தனியாகக் குடித்தனம் செல்லுமாறு தந்தை கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் வீட்டைக் காலி செய்ய மறுத்ததுடன், தன்னைச் சரியாக நடத்தவில்லை என்றும் பராமரிப்புச் செலவுகளை நிறுத்திவிட்டதாகவும் முதியவர் குற்றம்சாட்டினார்.
2020-ம் ஆண்டு நவம்பரில் மனைவி இறந்த பிறகு துன்புறுத்தல் அதிகரித்ததாகவும், 2022-ம் ஆண்டு செப்டம்பரில் மகனும் மருமகளும் தன்னை மிரட்டியதுடன், இளைய மகனைத் தாக்கியதாகவும் முதியவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007-ன் கீழ் மகனையும் மருமகளையும் வீட்டிலிருந்து வெளியேற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். ஆனால், அவரது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமித் மகாஜன், முதியவர்கள் வீட்டுக்குள்ளேயே துன்புறுத்தப்படுவதால், அதனைத் தனிப்பட்ட சாட்சியங்கள் மூலம் நிரூபிப்பது கடினம் என்று தெரிவித்தார். வீட்டிலிருந்து பிள்ளைகளை வெளியேற்றக் கோரும் முதியவர், ஒவ்வொரு துன்புறுத்தல் குற்றச்சாட்டையும் தெளிவான ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், தனது சொந்த வீட்டில் நிம்மதியாகவும் கண்ணியத்துடனும் வாழ விரும்புவதைத் தெரிவித்தாலே போதுமானது என்றும் கூறினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்ட ஆணையரின் உத்தரவுகளை ரத்து செய்து, மகனும் மருமகளும் 4 வாரங்களுக்குள் வீட்டைக் காலி செய்ய உத்தரவிட்டார். தேவைப்பட்டால் காவல்துறையினர் முதியவருக்கு உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
