LATEST NEWS
அடேங்கப்பா.. 5 லட்சம் பேருக்கு விருந்து.. குதிரை பந்தயத்தில் தார் கார் பரிசு! அம்பானியையே மிஞ்சிய முன்னாள் எம்.எல்.ஏ மகளின் பிரம்மாண்ட திருமணம்..!!
பீகார் முன்னாள் எம்.எல்.ஏ. அனந்த் சிங் தனது இளைய மகள் ஷிவாங்கி சிங்கின் திருமணத்தை, ரிஷிகேஷ் குமாருடன் ஒரு ஊரே ஒன்றுகூடும் பிரம்மாண்ட திருவிழாவாக மாற்றியுள்ளார். ஜெய்ப்பூர் அரண்மனை பாணியில் 10 முதல் 12 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட மண்டபம், ஜெய்மாலா மேடை, ஹெலிபேட் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன; மேலும் ஹல்தி விழாவில் அனந்த் சிங் நடனமாடியதும், பாட்னா தானாபூர் ரிசார்ட்டில் நடந்த திலக விழாவில் சுமார் 100 வாகனங்கள் அணிவகுத்து, மருமகனுக்கு சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள வெள்ளை லேண்ட் ரோவர் டிபெண்டர் கார் மற்றும் தங்கம், வெள்ளிப் பொருட்கள் பரிசளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
விருந்தினர்களை உற்சாகப்படுத்த 12 ஏக்கர் பரப்பளவில் குதிரை பந்தயமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; இதில் முதலிடம் பிடிப்பவருக்கு மஹிந்திரா தார் கார், 2-வது இடத்திற்கு மோட்டார் சைக்கிள், 3-வது இடத்திற்கு ஸ்கூட்டர் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட குதிரைகள் கிராமத்திற்கு வந்துள்ளன. சுமார் 5 லட்சம் விருந்தினர்களுக்கு 150-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் தயாராகின்றன; 500-க்கும் மேற்பட்ட ஹல்வாய்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பல பந்தல்களில் இரவு பகலாக இனிப்பு தயாரிப்பில் ஈடுபட்டு, பால் டேங்கர்கள் மூலம் பால் கொண்டு வரப்படுகிறது.
மழையால் குதிரை பந்தய பாதை மற்றும் ஹெலிபேட் சேதமடைந்து சேறு குவிந்தபோதிலும், அனந்த் சிங்கின் நேரடி ஆய்வின் கீழ் ஜேசிபி எந்திரங்கள் மூலம் சேறு அகற்றப்பட்டு மண் கொட்டி சமன் செய்யப்பட்டதுடன், இரும்பு கம்பிகள் மூலம் பந்தல்களும் மேடைகளும் உயர்த்தப்பட்டு இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. பவன் சிங், அக்ஷரா சிங், குஞ்சன் சிங் உள்ளிட்ட போஜ்புரி திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முறைப்படி அழைப்பிதழ் இல்லாத பொதுமக்களும் வந்து விருந்து உண்ணலாம் என அனந்த் சிங் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
