LATEST NEWS
“ஆண்டுக்கு 17,000 உயிர்களைப் பறிக்கும் கொடிய மருந்து”.. தமிழ்நாடு முழுவதும் அதிரடி தடை … ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்ட 35,415 லிட்டர் பின்னணி என்ன?…
தமிழ்நாடு முழுவதும் பாராகுவாட் டைகுளோரைடு என்ற களைக்கொல்லி மருந்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தடை விதித்துள்ளது. அனைத்து பசுமையான களைகள் மற்றும் பயிர்களைத் தொடு நஞ்சாக அழிக்கக் கூடிய இந்த மருந்துக்கு விஷமுறிவு மருந்து இல்லாததால், இதைக் குடித்து ஆண்டுதோறும் சராசரியாக சுமார் 17,000 பேர் தற்கொலை செய்து கொள்வதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து மத்திய அரசு இந்தியா முழுவதும் விதித்த தடையைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு 25.11.2026 அன்று வெளியிட்ட அரசிதழ் எண்.501 மூலம் இந்தத் தடையை அமல்படுத்தியுள்ளது.
இதன்படி, பாராகுவாட் டைகுளோரைடு மருந்தின் உற்பத்தி, இறக்குமதி, போக்குவரத்து, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவை மாநிலம் முழுவதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படுவதோடு, புதிய பதிவுகளும் அனுமதிக்கப்படாது; உற்பத்தியாளர்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் மற்றும் பதிவுக் குழுவிடம் உடனடியாகத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடையைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புக் குழுக்கள் மூலம் நடத்தப்பட்ட தீவிர சோதனைகளில், இருப்பில் வைக்கப்பட்டிருந்த மொத்தம் 35,415 லிட்டர் பாராகுவாட் டைகுளோரைடு மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடையை மீறும் நிறுவனங்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்துகள் சட்டம் 1968 மற்றும் விதிகள் 1971-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி விவசாயிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் கேட்டுக்கொண்டுள்ளார்.
