CRIME
“விதான சௌதா வெடிகுண்டால் தகர்க்கப்பட்டது..” பெங்களூருவை அலறவிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ.. பதறிய போலீஸ்.. அடுத்த சில மணி நேரத்தில் வாலிபருக்கு நடந்த அதிரடி சம்பவம்..!!
பெங்களூருவில் உள்ள கர்நாடக சட்டமன்றத் தேவையான விதான சௌதா கட்டடம் வெடித்துச் சிதறுவது போல, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான வீடியோவை வெளியிட்ட பீகாரைச் சேர்ந்த வாலிபர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தின் கோஷ்கிபூர் பகுதியைச் சேர்ந்த ஹஸ்ரத் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவுக்குக் குடியேறிய இவர், அங்கு குழாய் பதிக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “விதான சௌதா வெடிகுண்டால் தகர்க்கப்பட்டது” என்ற வாசகத்துடன் அந்தப் போலி வீடியோவைப் பதிவிட்டுள்ளார். சமூக ஊடகங்களை தீவிரமாகக் கண்காணித்து வந்த விதான சௌதா காவல் நிலைய அதிகாரி இந்த வீடியோவைக் கண்டறிந்ததை அடுத்து, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி, பொது அமைதியைக் குலைக்க முயன்றதாகச் சொல்லி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஹஸ்ரத் அலி உடனடியாகக் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
