LATEST NEWS
திக் திக் திக்… மயக்க ஊசி போட்டும் அடங்கல… கண்ணிமைக்கும் நேரத்தில் வனக்காவலர் மீது பாய்ந்த சிறுத்தை… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
நேபாளத்தின் லம்ஜுங் மாவட்டத்தில் உள்ள பெசிசஹார் பகுதியில் அமைந்த லம்ஜுங் பிரிவு வன அலுவலகத்தில், மயக்க ஊசி செலுத்தப்பட்ட சிறுத்தை ஒன்று கூட்டை உடைத்துக் கொண்டு தப்பி வனக் காவலரைத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெசிசஹார் பகுதியின் துங் கோலாவிலிருந்து மீட்கப்பட்ட இந்தச் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு, வன அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர், அதை சிறிய கூண்டில் இருந்து பெரிய கூண்டுக்கு மாற்ற அதிகாரிகள் முயன்றபோது, எதிர்பாராத விதமாக அது திடீரென விழித்துக் கொண்டு தப்பியோட முயன்றது. மயக்கத்தில் இருந்த நிலையிலும் சிறுத்தை தப்பிய இந்தக் காட்சி வீடியோவாக வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வலைதளத்தில் வெளியான அந்த வீடியோவில், ஒரு சிறிய வாகனத்திலிருந்து இரண்டு நபர்கள் கூண்டை இறக்கி வன அலுவலகத்திற்கு வெளியில் தரையில் வைப்பது தெளிவாகத் தெரிகிறது. சிறுத்தையை பெரிய கூண்டுக்கு மாற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, அது திடீரென தீவிரமாக இயங்கத் தொடங்கியது. அதன்பின், கூண்டின் கதவை பலவந்தமாகத் திறந்து கொண்டு வெளியேறிய அந்தச் சிறுத்தை, அருகில் இருந்தவர்களை நோக்கிப் பாய்ந்தது. இதில் 57 வயதான புத்தி ஜாங் குருங் என்ற வனக் காவலர் கீழே தள்ளப்பட்டு சிறுத்தையால் கடுமையாகத் தாக்கப் பட்டார். அங்கிருந்த மற்றொருவர் உலோகக் கம்பியால் சிறுத்தையை விரட்ட முயன்றபோதிலும், அத்தாகுதலில் வனக் காவலருக்குக் காயங்கள் ஏற்பட்டன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தப்பி ஓடிய சிறுத்தை வன அலுவலக வளாகத்திற்குள் சுற்றித் திரிந்ததோடு, அங்குள்ள தூண் ஒன்றில் ஏறவும் முயன்றது. வனத்துறை ஊழியர்கள் தடுப்புகளையும் பிற கூண்டுகளையும் பயன்படுத்திச் சிறுத்தையைக் கட்டுப்படுத்த உடனடியாக தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். சிறுத்தை தப்பிய செய்தி அப்பகுதியில் பரவியதால், வன அலுவலகத்திற்கு வெளியில் பெருமளவில் பொதுமக்கள் திரண்டனர். நிலைமையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் சிறுத்தையின் அருகில் செல்வதைத் தடுக்கவும் காவல்துறையினரும் வன அதிகாரிகளும் இணைந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர்.
