LATEST NEWS
பார்த்தாலே நடுங்குதே..! இரவு முழுவதும் தலையணைக்கு அடியில் சுருண்டிருந்த நாகப்பாம்பு – காலையில் ஹேர்பின் தேடிய பெண்ணுக்கு காத்திருந்த மரண பயம்..!!
பெங்களூரு பாகல்குண்டே பகுதியில் உள்ள பைரவேஷ்வரா நகரில், இரவு முழுவதும் படுக்கையறையில் சுற்றித் திரிந்த ராட்சத நல்லபாம்பு ஒன்று, காலையில் தூங்கி எழுந்த பெண்ணின் தலையணைக்கு அடியில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் படுக்கையறையில் ரூபா என்ற பெண்ணும் அவரது சகோதரரும் இரவு முழுவதும் தூங்கியுள்ளனர். தங்களுக்கு அருகிலேயே இவ்வளவு பெரிய நச்சுப்பாம்பு இருந்தது தெரியாமல் அவர்கள் உறங்கியது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காலையில் எழுந்த ரூபா, தனது கூந்தலில் வைப்பதற்காக ஹேர்பின்னைத் தேடியுள்ளார். அப்போது தலையணையைத் தூக்கிப் பார்த்தபோது, அதன் அடியில் பிரம்மாண்டமான நல்லபாம்பு சுருண்டு கிடப்பதைக் கண்டு அலறியடித்து ஓடியுள்ளார். சத்தம் கேட்டு எழுந்த அவரது சகோதரரும் அதிர்ச்சியடைந்து, இருவரும் உடனடியாக அறையை விட்டு வெளியேறினர். ஜன்னல் வழியாக இந்த விஷப்பாம்பு நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
உடனடியாக இது குறித்துப் பாம்பு பிடிக்கும் வீரரான நாகேந்திரா என்பவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர், தலையணைக்கு அடியில் சீறிக்கொண்டிருந்த நல்லபாம்பைப் பாதுகாப்பான முறையில் மீட்டு, அருகில் உள்ள வனப்பகுதியில் கொண்டு போய் விட்டார். அதிர்ஷ்டவசமாக இருவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டதால், அந்தக் குடும்பத்தினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
