LATEST NEWS
மருத்துவ உலகையே உலுக்கிய விசித்திரம்.. 16 வயது சிறுவனின் கண் இமைக்கு மேல் முளைத்த பற்கள் – உலகிலேயே முதல்முறை..!!
இந்தியாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவனின் இடது கண் இமைக்கு மேல் இரண்டு பற்கள் வளர்ந்திருந்த அரிய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாய்க்குள் வளர வேண்டிய பல் இடம்பெயர்ந்து கண் இமை மற்றும் புருவத்திற்கு இடைப்பட்ட பகுதியில் வளர்ந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். மருத்துவ வரலாற்றிலேயே கண் இமைப் பகுதியில் பல் முளைத்திருப்பது உலகில் இதுவே முதல் மற்றும் ஒரே நிகழ்வு என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில் அந்தப் பகுதியில் ஏற்பட்ட வீக்கத்திற்கு வலி இல்லாததால், அது ஒரு சாதாரணக் கட்டி என்று சிறுவனின் பெற்றோர் நினைத்துள்ளனர். ஆனால், சில நாட்களில் கண் இமைக்கு மேல் கடினமான, வெள்ளை நிறத்தில் இரண்டு கட்டிகள் வெளியே தெரியத் தொடங்கியதால் கவலையடைந்த பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனுக்குச் செய்யப்பட்ட சி.டி ஸ்கேன் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளின் முடிவில்தான், அது கட்டி அல்ல, பற்கள் என்பது உறுதியானது.
பொதுவாக மரபணுப் பிரச்சினைகள் அல்லது முகத்தில் ஏற்படும் கடுமையான காயங்கள் காரணமாகவே உடலின் மற்ற பகுதிகளில் பற்கள் வளரும் (Ectopic Tooth) நிலை ஏற்படும். ஆனால், இந்தச் சிறுவனுக்கு அப்படி எந்தப் பின்னணியும் இல்லாததால், தற்செயலாக தவறான இடத்தில் இந்தப் பற்கள் உருவாகியுள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நியூயார்க் போஸ்ட் இதழில் வெளியாகியுள்ள இந்தச் சம்பவத்தில், மருத்துவர்கள் சிறுவனுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அந்தப் பற்களை அகற்றியுள்ளனர்.
