LATEST NEWS
“நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்..” சத்தியம் செய்து ஹோட்டல் அறைகளில் சீரழித்த கொடூரம்.. கடைசியில் கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்காரர்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் காவலர் ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மண்டலா மாவட்டத்தைச் சேர்ந்த அப்பெண் அளித்துள்ள புகாரின்படி, சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் நர்மதாபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சித்தார்த் ஆர் என்ற இளைஞருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் தொடங்கிய இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறிய நிலையில், திருமணம் செய்து கொள்வதாக அந்த இளைஞர் அப்பெண்ணிற்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
இதனை நம்பிய அப்பெண்ணை, ஏப்ரல் 2026 முதல் நவம்பர் 2026 வரையிலான காலகட்டத்தில் ஜபல்பூரில் உள்ள மதன் மஹால் மற்றும் அதன் ரயில் நிலையப் பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு ஹோட்டல்களுக்கு அந்த இளைஞர் அழைத்துச் சென்றுள்ளார். திருமணம் செய்து கொள்வதாகத் தொடர்ந்து நம்பிக்கையளித்து, அந்தச் சந்திப்புகளின் போது அப்பெண்ணுடன் பலமுறை கட்டாயப்படுத்தி உடல் ரீதியான உறவில் ஈடுபட்டுள்ளார். ஆனால், சமீபத்தில் அப்பெண் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியபோது, அந்த இளைஞர் தனது வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியதோடு, அவரிடமிருந்து விலகத் தொடங்கியுள்ளார்.
மேலும், திருமணம் செய்து கொள்ள முடியாது எனத் திட்டவட்டமாக மறுத்ததோடு, அப்பெண்ணிற்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட சித்தார்த் ஆர் மண்டலா காவல்துறையில் காவலராகப் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகள் 69 மற்றும் 351(1) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
