LATEST NEWS
அதிரும் அரசியல் களம்..! விஜய் ரூட்டை கையில் எடுத்த தனுஷ்.. ரசிகர்களின் ரகசிய ஸ்கெட்ச் – அடுத்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்..!!
நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு அவரது ‘விஜய மக்கள் இயக்கம்’ எவ்வாறு அடித்தளமாக அமைந்ததோ, அதே பாணியை தற்போது நடிகர் தனுஷின் ரசிகர் மன்றமும் பின்பற்றத் தொடங்கியுள்ளது. விஜய் மக்கள் இயக்கம் கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 169 இடங்களில் போட்டியிட்டு, 115 இடங்களில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வியக்கத்தக்க வெற்றி தான் விஜய் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியைத் தொடங்கி முழுநேர அரசியலில் இறங்க முக்கிய ஊக்கமாக அமைந்தது.
இதே தேர்தல் வியூகத்தைக் கையில் எடுத்துள்ள நடிகர் தனுஷின் தலைமை ரசிகர் மன்ற நிர்வாகிகள், அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மாவட்ட வாரியாக உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளின் விவரங்கள் மற்றும் வார்டுகளின் நிலவரங்கள் தற்போது ரகசியமாகச் சேகரிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜயின் அரசியல் பாதையைப் போலவே தனுஷின் ரசிகர் மன்றமும் தங்களது அடிமட்ட பலத்தைச் சோதிக்க இந்தத் தேர்தலைப் பயன்படுத்தவுள்ளது.
இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், நடிகர் தனுஷ் இதுவரை இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ரசிகர்கள் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளனரா அல்லது தனுஷின் மறைமுக ஒப்புதலுடன் இந்த நகர்வு நடக்கிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. வரும் நாட்களில் தனுஷ் ரசிகர் மன்றத்தின் இந்த அரசியல் நகர்வு தமிழக உள்ளாட்சித் தேர்தல் களத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவரும்.
