LATEST NEWS
உழைத்ச்ச கூலியை கேட்டது குத்தமா..? சம்பளத்தைக் கேட்ட ஓட்டுநருக்கு நேர்ந்த கொடூரம்… இறந்துவிட்டதாக நினைத்து மது அருந்திய கும்பல்… அடுத்து காத்திருந்த டுவிஸ்ட்..!!
கர்நாடக தலைநகர் பெங்களூருவில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக தண்ணீர் டேங்கர் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த மோகன் என்பவருக்கு உரிமையாளர் ஸ்ரீனிவாஸ் 7 மாத சம்பள பாக்கியான சுமார் 2 லட்சம் ரூபாயை வழங்காமல் இழுத்தடித்துள்ளார். இதனால் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நின்ற மோகன், ஜீவன் பீமா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணைக்காக காவல் நிலையம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது பணம் குறித்துப் பேச வருவது போல் தனது மூன்று கூட்டாளிகளுடன் வந்த உரிமையாளர் ஸ்ரீனிவாஸ், மோகனின் தலையில் பின்னால் இருந்து இரும்பு கம்பியால் தாக்கி வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றார்.
கடத்தலின் போது தங்களை யாரோ பின்தொடர்வதாக சந்தேகமடைந்த குற்றவாளிகள், காயமடைந்த மோகனை காரின் டிக்கியில் அடைத்து ஆளரவமற்ற இடத்திற்கு கொண்டு சென்று கம்பிகள் மற்றும் தடிகளால் கொடூரமாகத் தாக்கியதில் அவர் மயக்கமடைந்தார். மோகன் இறந்துவிட்டதாக நினைத்த அவர்கள், காரை ரயில் தண்டவாளம் அருகே நிறுத்திவிட்டு மது அருந்தத் தொடங்கினர். இதற்கிடையில் நினைவு திரும்பிய மோகன், குற்றவாளிகள் மது போதையில் இருந்ததைப் பயன்படுத்தி அங்கிருந்து சாதுரியமாகத் தப்பித்து நேராக காவல் நிலையம் சென்று புகார் அளித்தார்.
மோகனின் புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த ஜீவன் பீமா நகர் காவல்துறையினர், முக்கிய குற்றவாளியான உரிமையாளர் ஸ்ரீனிவாஸ் மற்றும் புவன் உட்பட மூன்று பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த மோகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது நலமாக உள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
