LATEST NEWS
அடக்கடவுளே..! பால்கனியில் இருந்து குட்கா துப்ப முயன்ற முதியவர்.. உயர்மின்னழுத்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாப பலி..!!
மத்தியப் பிரதேசம் விதிஷா மாவட்டம் கஞ்ச்பசோதா பகுதியில், வாடகை வீட்டின் மூன்றாவது மாடி பால்கனியில் இருந்து குட்கா துப்ப முயன்ற 65 வயது முதியவர், உயர்மின்னழுத்த மின்சாரக் கம்பி பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். காயத்ரி நகர் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் இந்த விபத்து நேர்ந்துள்ளது. பால்கனியை ஒட்டிச் சென்ற 11 கேவி (11 KV) உயர்மின்னழுத்த மின்சாரக் கம்பியில் எதிர்பாராதவிதமாக அவரது உடல் பட்டதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த முதியவர் சத்தர்பூர் பகுதியைச் சேர்ந்த பிரபுலால் குப்தா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று பால்கனியில் இருந்து குட்காவை துப்புவதற்காக அவர் கீழே குனிந்தபோது, மிக அருகில் சென்ற மின் கம்பியில் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பால்கனியின் இரும்பு கிரில் கம்பியிலேயே சிக்கிக்கொண்டது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மின்வாரியத்திற்குத் தகவல் அளித்து மின்சார இணைப்பைத் துண்டித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகில் செல்லும் ஆபத்தான உயர்மின்னழுத்த மின் கம்பிகளை அகற்றக் கோரி பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் மற்றும் உள்ளூர் கவுன்சிலர் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
