LATEST NEWS
என்ன கொடுமை இது..! மக்கள் உயிருடன் விளையாடிய அமேசான், ஸ்விக்கி, பிக்பாஸ்கெட்… கொடூர நச்சுப் பழ விற்பனையால் முடக்கப்பட்ட உரிமங்கள்..!!
கர்நாடகாவில் ஆன்லைன் உணவு டெலிவரி மற்றும் இ-காமர்ஸ் தளங்களான அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகியவற்றின் உணவு உரிமங்களை அம்மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ‘ஊமத்தங்காய்’ மற்றும் அதன் விதைகளை, உண்ணக்கூடிய உணவுப் பொருட்கள் போல இணையதளங்களில் விளம்பரம் செய்து விற்பனை செய்ததும், அவற்றை கிடங்குகளில் சேமித்து வைத்திருந்ததும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
ஊமத்தங்காய் மற்றும் விதைகளில் ஆபத்தான நச்சுத்தன்மை உள்ளதால், அதனை உட்கொள்வது மனித உயிருக்கே பெரும் ஆபத்தை விளைவிக்கும். சில தயாரிப்புகளில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் பதிவு எண்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக உணவுப் பொருளாக விற்பனை செய்தது மக்கள் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்ததால், உணவு பாதுகாப்பு சட்டம் 2006-ன் கீழ் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது. மேலும், அந்த ஆன்லைன் தளங்களில் ஊமத்தங்காய் குறித்த அனைத்து விளம்பரங்களையும் உடனடி விற்பனையையும் நீக்க உணவு பாதுகாப்பு ஆணையர் கே.ஸ்ரீனிவாஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜரான நிறுவனங்களில், அமேசான் எந்த விளக்கமும் அளிக்கவில்லை; இன்ஸ்டாமார்ட் நிறுவனம் கால அவகாசம் கேட்டது; பிக்பாஸ்கெட் நிறுவனம் இனி “மனித நுகர்வுக்கு உகந்தது அல்ல” என்ற எச்சரிக்கையுடன் மட்டுமே விற்கப்படும் எனக் கூறியது. ஆனால் நிறுவனங்களின் இந்த பதில்கள் திருப்திகரமாக இல்லை எனக் கூறி உரிமங்களை இடைநீக்கம் செய்த அதிகாரிகள், அந்த ஆன்லைன் தளங்களுக்கு ஊமத்தங்காயை விநியோகம் செய்த விற்பனையாளர்களின் உரிமங்களையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
