LATEST NEWS
“ஜெம் வீரமணிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” வீடியோ ஆதாரம் மங்கலாக இருந்ததால் கைது செய்யல.. தவெக அரசுக்கு மாஜி அமைச்சர் ரகுபதி அதிரடி பதிலடி..!!
போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில், அவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் (திமுக) எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று திமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி விளக்கமளித்துள்ளார். வீரமணியை திமுக அரசு காப்பாற்ற முயன்றதாகத் தமிழக வெற்றிக் கழக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த விவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரகுபதி இதுகுறித்துக் கூறுகையில், ஜெம் கிரானைட் வீரமணி மீது கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி ஒரு தன்னார்வலர் மூலமாகப் புகார் அளிக்கப்பட்டது. புகார் பெறப்பட்ட அடுத்த நாளான அக்டோபர் 7-ஆம் தேதியே காவல் துறையினரால் முதல் தகவல் அறிக்கை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. வீரமணி தங்களுக்கு வேண்டியவராக இருந்திருந்தால், புகார் வந்த அடுத்த நாளே FIR பதிவு செய்ய வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு இருந்திருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கில் வீரமணி ஏன் கைது செய்யப்படவில்லை என்ற கேள்விக்கு விளக்கமளித்த ரகுபதி, முதற்கட்ட விசாரணையின் போது பாதிக்கப்பட்ட சிறுமி நேரடியாகப் புகார் அளிக்கவில்லை என்றும், ஆதாரமாகக் காட்டப்பட்ட வீடியோ காட்சிகள் தெளிவாக இல்லாமல் நிழல் போல மங்கலாக இருந்ததால் உடனடி நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்றும் கூறியுள்ளார். ஆதாரங்கள் கிடைத்த பிறகு மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதே தவிர, திமுக அரசு எந்த ஒரு வழக்கையும் வாபஸ் பெறவில்லை என்று அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
