LATEST NEWS
“தண்ணீர் கேட்டதற்கு இப்படியா?” டொமினோஸ் கடையில் புகுந்து மேலாளரை அறைந்த கும்பல்… வேடிக்கை பார்த்த காவல்துறையால் சர்ச்சை…!!
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள செக்டர் 12 பகுதியில் அமைந்துள்ள டொமினோஸ் உணவகத்தில், தண்ணீர் வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அதன் மேலாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜய் என்ற நபர் கடைக்கு வந்து தண்ணீர் கேட்டபோது, பணியாளர் பற்றாக்குறை மற்றும் வேலைப் பளு காரணமாக உடனடியாக அதனை கவனிக்க இயலாததால் வாக்குவாதம் வெடித்துள்ளது.
இந்தத் தகராறின் போது கடையின் மேலாளர் நிதேஷ் குமார் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு ஆத்திரமடைந்த அந்த நபர் அவரை அறைந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த நபரின் ஆதரவாளர்கள் சிலரும் கடைக்குள் நுழைந்து மோதலில் ஈடுபட்டனர்; இந்த முழுச் சம்பவமும் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை உரிய முறையில் தலையிடவில்லை என்றும், தம்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மேலாளர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையே, புகாரைப் பெற்றுள்ளதாகவும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ள காவல் துறையினர், விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
