CRIME
அய்யோ கொடுமையே…! மனைவியின் கண்முன்னே கணவனை வெட்டிச் சாய்த்த மர்ம கும்பல்..! ஜாமீனில் வந்த நபருக்கு நேர்ந்த சோகம்… நடுரோட்டில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த வீரபத்ரன் என்பவர், திமுக பிரமுகர் முருகன் என்பவரை காரில் கடத்தி நத்தம் அருகே கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அவர், திண்டுக்கல் சாணார்ப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கம்போல் கையெழுத்து போட்டுவிட்டுத் திரும்புவது வழக்கம். இந்த நிலையில், இன்று தனது மனைவி மாரியம்மாளுடன் காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட்டுவிட்டு இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, நொச்சி ஓடைப்பட்டி அருகே வீரபத்ரனின் பைக் மீது கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் நிலைதடுமாறி கணவனும் மனைவியும் சாலையில் கீழே விழுந்தனர். உடனடியாக அந்த காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள், மனைவி மாரியம்மாளின் கண்முன்னே வீரபத்ரனை கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டித் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் பின் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்த வீரபத்ரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சாணார்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த மனைவி மாரியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வீரபத்ரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில், புறநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மஞ்சிமா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகள் தீவிரமாகத் தேடப்பட்டு வருகின்றனர். பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
