CRIME
தீர்ப்பு வர 2 நாள் முன்னதாக கொடூரம்..! சமாதானம் பேசுவதாகக் கூறி வரவழைத்து… மனைவியைக் கொன்று கரும்புத் தோட்டத்தில் வீசிய ராணுவ வீரர்.. அதிர்ச்சிச் சம்பவம்..!
உத்தரப் பிரதேசம் பாக்பத் மாவட்டத்தில், வரதட்சணைக் கொடுமை வழக்கின் தீர்ப்பு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ராணுவ வீரரான கணவன் தனது மனைவியைச் சதித்திட்டம் தீட்டிக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. காஷ்மீரில் பணியாற்றி வரும் அலீஷான் என்ற ராணுவ வீரர், நீதிமன்றத் தீர்ப்பு தனக்கு எதிராக வரலாம் என்று அஞ்சி, தனது மனைவி ருபினாவை வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் தனியாகச் சந்திக்க அழைத்து இந்தக் கொலையைச் செய்துள்ளார்.
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்குத் திருமணம் நடந்து, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ருபினா தனது இரண்டு வயது மகனுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த வரதட்சணை வழக்கின் இறுதித் தீர்ப்பு அக்டோபர் 26ஆம் தேதி வழங்கப்பட இருந்த நிலையில், கணவன் அலீஷான் சமாதானமாகப் போகலாம் எனக் கூறி ருபினாவை வரவழைத்துள்ளார். ருபினா தனது மொபைல் போன் மற்றும் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு கணவனைச் சந்திக்கச் சென்ற நிலையில், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
மூன்று நாட்களுக்குப் பிறகு, வாஜித்பூர்-பிஜரௌல் சாலைக்கு அருகில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது. போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர், மேலும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சதித்திட்டக் கொலை தொடர்பாக, ராணுவ வீரரான கணவன் உட்பட மொத்தம் 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
