CRIME
“என் சடலத்தை மனைவி தொடவே கூடாது” என் ஆன்மா அலைந்து திரியட்டும், எனக்காக எந்தச் சடங்கும் செய்யாதீங்க… 33 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பின் கணவன் எடுத்த கொடூர முடிவு… உருக்கமான வாட்ஸ் அப் மெசேஜ்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தின் சர்சாவா பகுதியைச் சேர்ந்த தேவதத் சர்மா (52), அங்குள்ள ஒரு கல்லூரியில் எழுத்தராகப் பணியாற்றி வந்தார். சனிக்கிழமை மாலை பணி முடிந்து வீடு திரும்பிய அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விபரீத முடிவை எடுத்து உயிர் துறந்துள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முடிவை எடுப்பதற்கு முன்பாக, தேவதத் சர்மா தனது உறவினருக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், கடந்த 33 ஆண்டு கால குடும்ப வாழ்க்கையில் தான் சந்தித்த மன உளைச்சல் மற்றும் அவமானங்களைத் தாங்க முடியாமல் இந்த முடிவை எடுப்பதாக மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். கௌரவமாக வாழ முடியாத சூழலில் உயிர் வாழ்வதை விட இது மேலானது என்று அவர் தனது செய்தியில் பதிவிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்தச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மறைவிற்குப் பிறகு, தனது மனைவி தனது உடலைத் தொடக்கூடாது என்றும், தனக்காக எந்தவொரு மதச் சடங்குகளையும் செய்யக் கூடாது என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், இந்தத் தீவிர முடிவுக்குக் காரணமான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
