LATEST NEWS
ஹேர் ஸ்டைல் மாற்றிய மேயர் பிரியா மீது அவதூறு பரப்புறாங்க.. அவங்களும் பெண் தானே.. ஏன் முதல்வர் அனுமதிக்கிறார்..? கனிமொழி காட்டம்..!!
சென்னை மேயர் பிரியாவுக்கு ஆதரவாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது கண்டனக் குரலை வெளிப்படுத்தியுள்ளார். அண்மைக்காலமாகச் சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆதரவாளர்கள் மற்றும் சில தரப்பினரால் மேயர் பிரியாவின் தனிப்பட்ட தேர்வுகள், தோற்றம் மற்றும் நடவடிக்கைகள் குறித்துத் திட்டமிட்ட அவதூறுகளும் கேலிப் பதிவுகளும் பரப்பப்பட்டு வருகின்றன. தான் என்ன செய்தாலும் எதிர்மறையாகச் சித்தரிக்கப்படுவதாக மேயர் பிரியா மிகுந்த மனவேதனையுடன் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டிருந்த நிலையில், அவருக்குப் பின்பலமாக கனிமொழி எம்பி களமிறங்கியுள்ளார்.
இணையவழித் தாக்குதல்கள் குறித்துத் தவெக தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜயிடம் கனிமொழி நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். “எந்தப் பெண்ணைப் பற்றியும் யாரும் தவறாகப் பேசுவதை அனுமதிக்க மாட்டேன்” என்று முதல்வர் விஜய் தொடர்ந்து கூறி வருகிறார்; அப்படியிருக்க, மேயர் பிரியா மீது இத்தகைய அவதூறுத் தாக்குதல்களைத் தனது தொண்டர்களும் ரசிகர்களும் நடத்துவதை அவர் ஏன் அனுமதிக்கிறார்? என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் சாடியுள்ளார்.
ஒரு ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் அரசியலுக்கு வருவதே கடினம் என்றும், அதிலும் குறிப்பாகப் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மக்கள் பிரதிநிதியாகப் பொறுப்பேற்றுச் சாதனை படைப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சிலர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகவும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார். பொதுவாழ்விலும் இணையதளங்களிலும் பெண் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மீதான தனிநபர் தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை என்றும், பெண்களின் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
