CRIME
அடக்கடவுளே.. விளையாட்டாக சொன்ன ஒரு வார்த்தை… நள்ளிரவில் தூங்கும்போது கழுத்தில் இறங்கிய கோடரி… தூத்துக்குடியில் பயங்கரம்..!!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த மாயாண்டி மகன் காளிராஜ் (வயது 40). கோவில்பட்டி அருகே அஞ்சுராமன்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துகருப்பன் மகன் சின்னத்துரை (40). இவர்கள் 2 பேரும் கோவில்பட்டி திட்டங்குளம் காய்கறி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரும் மார்க்கெட்டில் வேலைக்குச் சென்றபோது, ஒருவரை ஒருவர் மாறி மாறி உருவக்கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 25-ந்தேதி இரவு உருவக்கேலி செய்தது தொடர்பாக அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த காளிராஜ், சின்னத்துரையை தாக்கியதாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வழக்கம்போல் மார்க்கெட்டுக்கு வேலைக்குச் சென்ற காளிராஜ், இரவில் வேலை முடிந்ததும் அதிகாலையில் வரும் லாரிகளில் இருந்து மூட்டைகளை இறக்குவதற்காக அங்குள்ள கடையில் படுத்து தூங்கினார். நள்ளிரவில் சின்னத்துரை மதுபோதையில் மார்க்கெட்டுக்கு கோடரியுடன் வந்து, கடையில் தூங்கிக் கொண்டிருந்த காளிராஜை வெட்டினார். இதில் கழுத்தில் பலத்த வெட்டுக் காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பின்னர் சின்னத்துரை கோடரியுடன் கொப்பம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நீல் சர்மா மற்றும் கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், இறந்த காளிராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னத்துரையை கைது செய்தனர். இறந்த காளிராஜிக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
