LATEST NEWS
எவ்வளவு தைரியம் உனக்கு..? போலீஸ் முன்னிலையிலேயே பெண் மருத்துவருக்கு கன்னத்தில் விழுந்த அறை… வீடியோ வைரலானதால் மருத்துவர்கள் போராட்டம்..!
மகாராஷ்டிர மாநிலம் வர்தா மாவட்டத்தில் உள்ள ஆர்வி தாலுகா தலேகான் ஷியாம்ஜி பந்த் ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட குற்றவாளி ஒருவன், அங்கிருந்த பெண் மருத்துவ அதிகாரியைக் கன்னத்தில் அறைந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு பாதுகாப்புப் பணியில் போலீஸார் முன்னிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மருத்துவர் டாக்டர் ஸ்ரத்தா பூமாரே என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக, வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகக் காதிர் அலி ரசாக் அலி என்ற உள்ளூர் குற்றவாளியைக் காவல்துறையினர் அந்த சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். பரிசோதனைகள் அனைத்தும் முடிந்து தேவையான ஆவணங்களில் கையெழுத்திட்ட பின்னர், அந்த நபர் திடீரென பெண் மருத்துவரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், போலீஸார் அந்த நபரை உடனடியாகக் காவலில் எடுத்துள்ளனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் சங்கமான ‘கெசட்டட் மெடிக்கல் ஆபீசர்ஸ் அசோசியேஷன்’ மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையான புகார் அளித்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்த 5 போலீஸார் உரிய கவனத்துடன் செயல்படவில்லை என்றும், அவர்கள் மீது அலட்சியப் போக்கிற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வெளிநோயாளிப் பிரிவு சேவைகளைப் புறக்கணிக்கப் போவதாகவும் மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
