LATEST NEWS
ஐயா உதயநிதி.! உங்க வீட்டு பெண்கள்கிட்ட போய் கேளுங்க… எனக்கு போன் பண்ணினாங்க… “யார் பேசுனாங்கனு என்கிட்ட ரெக்கார்ட் இருக்கு” உதயநிதியை அலறவிட்ட தவெக எம்.எல்.ஏ கனிமொழி.. பெரும் பரபரப்பு..!!
சட்டமன்றத்தில் ஜோதிடம் குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு, கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மிகக் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார். “சட்டசபையில் நாங்கள் ஜோசியத்தை எல்லாம் நம்ப மாட்டோம் என்று சொன்னால் மட்டும் அது உண்மையாகிவிடுமா? உதயநிதி அவர்களே, நீங்கள் முதலில் உங்களுடைய வீட்டிற்குச் சென்று அங்குள்ள பெண்களிடம் கேட்டுப் பாருங்கள்” என்று சவால் விடுத்துள்ளார். மேலும், தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவோமா இல்லையா என்று கணித்துக் கூறுமாறு உதயநிதி வீட்டிலிருந்தே தனக்கு அழைப்புகள் வந்ததற்கான முழு ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகக் கூறி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் மற்றும் பராமரிப்புப் படி வழங்கும் திட்டத்தை விமர்சித்தவர்களுக்குப் பதிலளித்த கனிமொழி சந்தோஷ், தன் மீதான கார் சர்ச்சைகளுக்கும் ஆவேசமாக விளக்கமளித்துள்ளார். “மக்களின் வரிப்பணத்திலா நான் 26 கார்களை வாங்கி வைத்துள்ளேன்? நான் 26 கார்கள் வைத்திருப்பதை நீங்களே நேரில் வந்து பார்த்தீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், தன்னிடம் இருப்பது தனது சொந்த உழைப்பில் வந்த வாகனங்கள் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். தைரியம் இருந்தால் தன்னிடம் நேரடியாக வந்து பேசுமாறு அரசியல் எதிரிகளுக்குப் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.
பொது வாழ்க்கையில் இருக்கும் தன்னை உருவக் கேலி செய்தவர்களையும், தனிப்பட்ட முறையில் விமர்சித்தவர்களையும் கனிமொழி சந்தோஷ் மேடையிலேயே கடுமையாக வறுத்தெடுத்துள்ளார். “நாங்கள் அமைதியாகப் பேசாமல் இருந்தால் எங்களை அழகான பொம்மை என்கிறார்கள்; ஆனால் இது ஆபத்தான பொம்மையும் கூட என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று எச்சரித்துள்ளார். “எம்.எல்.ஏ ஆகிவிட்டால் தலையைச் சீவக் கூடாதா, நல்ல செருப்பு அணியக் கூடாதா, குளிக்கக் கூடாதா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய அவர், பெண்களின் கண்ணியத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும், மக்கள் மத்தியில் தங்களைத் திருத்திக் கொண்ட பின் நாட்டைத் திருத்த வரட்டும் என்றும் திமுக தரப்பை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார் .
