LATEST NEWS
குழந்தைங்க பாதுகாப்புல பணம் பார்த்த கேவலமான கும்பல்… 4,000 பள்ளிகளில் புரோக்கர் மூலம் வசூல் வேட்டை… அன்பில் மகேஷை கிழித்தெடுத்த அமைச்சர் நிர்மல்குமார்…!!
“பள்ளியில் பயிலும் குழந்தைகள் பாதுகாப்பில் பணம் பார்த்த கேவலமான கும்பல்.. திமுகவிற்கு பேசுவதற்கு அருகதையே கிடையாது…” என்று தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதான 100 கோடி ரூபாய் தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கு குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்தார்.
அமைச்சர் நிர்மல்குமார் தனது விளக்கத்தில், “குழந்தைகளுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, நாங்கள் வசூல் செய்வோம் என்ற ஒற்றை நோக்கில் திமுகவினர் செயல்பட்டுள்ளனர். கட்டாயக் கல்வி மற்றும் பள்ளிப் பாதுகாப்பு அங்கீகாரச் சான்றிதழ்களை வழங்குவதற்காக, தமிழகம் முழுவதும் 4,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் புரோக்கர்களை நியமித்து கோடிக்கணக்கில் பணத்தை வசூல் செய்துள்ளனர். இந்த மெகா ஊழல் தற்போது ஆதாரங்களுடன் அம்பலமாகி அவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளார்கள்” எனக் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற அங்கீகரிக்கப்படாத அமைப்பைத் தொடங்கி, அதன் மூலம் பள்ளிகளிடம் இருந்து பெருமளவில் லஞ்சப் பணம் மற்றும் ‘கட்சி நிதி’ என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார் . இந்த விவகாரத்தில் முறைகேடாகச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதால் குழந்தைகளின் பாதுகாப்பே கேள்விக்குறியாக்கப்பட்டதாகவும், இத்தகைய ஊழல் பின்னணி கொண்ட திமுகவிற்கு தற்போதைய தவெக அரசின் சட்ட ஒழுங்கு குறித்தோ அல்லது குழந்தைகள் பாதுகாப்பு குறித்தோ பேசுவதற்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என்றும் அமைச்சர் நிர்மல்குமார் ஆவேசமாகத் தெரிவித்தார்.
