CRIME
ராணுவ கமாண்டோ டூ பஞ்சர் வாலா..! பேஸ்புக் காதலனை நம்பி ஏமாந்த பெண்… கடைசியில் வெளிவந்த ‘பஞ்சர் கடை’ ரகசியம்..!!
பீகாரின் முசாபர்பூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவருக்கு, கடந்த ஜனவரி 2026-ல் முகமது அர்மான் என்ற வாலிபரிடமிருந்து பேஸ்புக்கில் நட்புக்கான அழைப்பு வந்துள்ளது. இருவரும் பேசி பழகியதில் அது காதலாக மாறியுள்ளது. தன்னை ஒரு இந்திய இராணுவ வீரன் என்று கூறி அந்தப் பெண்ணை அர்மான் நம்ப வைத்துள்ளார். அந்தப் பெண்ணை நேரில் சந்திக்க வரும்போது இராணுவ கமாண்டோ போன்ற உடையும், இராணுவ வீரர்களைப் போன்ற தலைமுடியலங்காரமும் செய்துகொண்டு வந்துள்ளார். மேலும், வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசும்போதும் இராணுவ சீருடை மற்றும் துப்பாக்கிகளுடன் தோன்றி அந்தப் பெண்ணின் நம்பிக்கையை முழுமையாகப் பெற்றுள்ளார்.
தான் ஒரு இராணுவ வீரன் என்று நம்பவைத்த அர்மான், அந்தப் பெண்ணிடம் அவ்வப்போது பல பொய்க் கதைகளைக் கூறி பணம் பறிக்கத் தொடங்கியுள்ளார். தான் பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருப்பதாகக் கூறியும், சில சமயங்களில் தான் தீவிரவாதிகளிடம் சிக்கிக் கொண்டதாக நாடகமாடியும் அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகக் கேட்டுள்ளார். அவன் கூறிய கதைகளை நிஜமென்று நம்பிய அந்த இளம் பெண், பலமுறை ஆன்லைன் மூலமாக அவனுக்குப் பெருமளவு பணத்தை அனுப்பியுள்ளார்.
நாட்கள் செல்லச் செல்ல அர்மானின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த அந்தப் பெண், அவரைப் பற்றி விசாரித்தபோது அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்தன. அர்மான் இராணுவ வீரர் இல்லை என்பதும், அவர் ஒரு சாதாரண சைக்கிள் கடையில் பஞ்சர் ஒட்டும் வேலை செய்து வருபவர் என்பதும் தெரியவந்தது. அதுமட்டுமில்லாமல், அவனுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்ததும் அம்பலமானது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், தனது தாய் மற்றும் மாமாவுடன் அர்மானின் வீட்டிற்குச் சென்று நியாயம் கேட்டுள்ளார். அப்போது அர்மானும் அவனது குடும்பத்தினரும் அந்தப் பெண்ணைத் தாக்கி, துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.தற்போது பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், வாட்ஸ்அப் ஆதாரங்களை ஆய்வு செய்து முகமது அர்மான் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
