LATEST NEWS
திக் திக் திக்… கடலில் நீந்திய 63 வயது முதியவர்… நொடியில் நடந்த கொடூரம்..! நண்பனின் கண்முன்னே மனித உயிரைப் பறித்த பெரிய வெள்ளைச் சுறா..!!
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Sorrento Beach அருகே வழக்கம்போல் கடலில் நீந்தச் சென்ற 63 வயதான கிரெக் ஓ’நீல் என்ற நபர், எதிர்பாராத விதமாக ஒரு பெரிய வெள்ளைச் சுறாவால் தாக்கப்பட்டார். கரையிலிருந்து சுமார் 15 மீட்டர் தொலைவில் நண்பருடன் நீந்திக் கொண்டிருந்தபோது நடந்த இந்த தாக்குதலுக்குப் பின், அவரது உடல் இதுவரை மீட்கப்படவில்லை. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட அந்தச் சுறாவைப் பிடித்து அழிக்க மேற்கு ஆஸ்திரேலிய மீன்வளத்துறை அமைச்சர் ஜாக்கி ஜார்விஸ் உத்தரவிட்டுள்ளார்.
பெரிய வெள்ளைச் சுறாக்கள் பாதுகாக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் என்பதால், மனிதர்களைத் தாக்கிய குறிப்பிட்ட சுறாவை பிடித்து அழிப்பதற்கான இதுபோன்ற உத்தரவு மிகவும் அரிதான ஒன்றாகும். சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகே மேற்கு ஆஸ்திரேலியாவில் இப்படியொரு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தச் சுறா மீண்டும் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தாலும், உயிரிழந்தவர் தொடர்பான தடயங்களை மீட்பதற்காகவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுறாவைப் பிடிப்பதற்காக சிறப்பு உபகரணங்களுடன் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக அதிகாரிகளுக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவில் சுறா தாக்குதலால் ஏற்படும் மூன்றாவது உயிரிழப்பு இது என்பதால், எதிர்காலத்தில் கடற்கரை பாதுகாப்பை அதிகரிக்க ட்ரோன்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
