CRIME
“வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்றால்…” டிஎஸ்பி மீது பெண் சுமத்திய பகீர் புகார்… உறவினர் வெளியிட்ட வீடியோவால் வெடித்த புதிய ட்விஸ்ட்.. கள்ளக்குறிச்சியில் உச்சகட்ட பரபரப்பு..!!
கள்ளக்குறிச்சியில் குடும்பச் சொத்து தொடர்பான தகராறில் புகார் அளிக்கச் சென்ற தன்னிடம், காவல் துணைக் கண்காணிப்பாளர் கலையரசன் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக அன்னலட்சுமி என்ற பெண் பரபரப்புப் புகாரை முன்வைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி தனது உறவினர்களான ஐஸ்வர்யா, சித்ரா மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் தன்னைத் தாக்கியதாகக் கூறி கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து விழுப்புரம் சரக டிஐஜியிடம் புகார் அளித்துவிட்டு, கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி தனது மகன் மற்றும் வழக்கறிஞருடன் டிஎஸ்பி கலையரசனைச் சந்திக்கச் சென்றபோது, தன்னை மட்டும் தனியாக அறைக்குள் வைத்துக்கொண்டு தன்னுடன் பாலியல் உறவு வைத்தால்தான் வழக்குப் பதிவு செய்வேன் என டிஎஸ்பி வற்புறுத்தி அத்துமீறியதாக அன்னலட்சுமி தனது புகார் மனுவில் பகீர் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.
அன்னலட்சுமியின் இந்தப் புகார் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்கப் பொய்யானவை என டிஎஸ்பி கலையரசன் மறுப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கமளித்துள்ள அவர், எதிர் தரப்பினர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுப்பதற்காகவே தன் மீது இத்தகைய அவதூறு பரப்பப்படுவதாகக் கூறியுள்ளார். மேலும், அன்னலட்சுமியிடம் விசாரணை நடத்தியபோது அறையில் மற்ற காவலர்களும் உடனிருந்ததாகவும், இந்த விவகாரம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உரிய விளக்கம் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அன்னலட்சுமியின் உறவினரான ஐஸ்வர்யா என்பவரும் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இரு குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட காலமாகச் சொத்துப் பிரச்சினை இருந்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் டிஎஸ்பி வழக்குப் பதிவு செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த அன்னலட்சுமி அவர் மீது பொய்யான பாலியல் புகாரை அளித்து வருவதாகவும் விளக்கமளித்துள்ளார். ஒருபுறம் பெண்ணின் பகீர் குற்றச்சாட்டும், மறுபுறம் டிஎஸ்பி மற்றும் உறவினரின் மறுப்பும் வெளியாகியுள்ள நிலையில், அறையில் உடனிருந்த காவலர்கள் மற்றும் டிஎஸ்பியிடம் உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதால் கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.
