CINEMA
“நான் மக்களால் உருவாக்கப்பட்டவன்… யாரையும் எதிர்ப்பதற்கு இத பண்ணல… “புதிய அரசியல் பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட சிவகார்த்திகேயன்..!!
நடிகர் சிவகார்த்திகேயனின் நற்பணி இயக்கம் சார்பில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி சென்னை போரூர் அருகே நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பகுதி அளவிலான 2,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், இந்த நற்பணி இயக்கம் யாருக்கும் போட்டியாகவோ அல்லது யாரையும் எதிர்ப்பதற்காகவோ தொடங்கப்படவில்லை என்றும், நம்மால் முடிந்த உதவிகளை அனைவருக்கும் செய்வதே இதன் முதன்மை நோக்கம் என்றும் தெளிவுபடுத்தினார்.
தனது திரையுலகப் பயணம் குறித்துப் பேசிய அவர், தான் சினிமா பின்னணியோ பெரிய பணக்காரக் குடும்பப் பின்னணியோ இல்லாத மிகச் சாதாரணமான ஒரு நபர் என்றும், தமிழ்நாட்டில் கனவுகளோடு இருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களில் தானும் ஒருவன் என்றும் குறிப்பிட்டார். ஆரம்பத்தில் சின்னச் சின்ன ஜாலியான படங்கள் மட்டுமே பண்ணலாம் என்று நினைத்த தன்னை, மக்கள் அனைவரும் சேர்ந்து கைதட்டி தூக்கிவைத்து ஒரு மாஸ் ஹீரோ இடத்தைக் கொடுத்துள்ளதை நினைவு கூர்ந்தார். இதனால் தான் ‘Self Made’ கிடையாது என்றும், மக்களால் உருவாக்கப்பட்ட ‘People Made’ என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 2012-இல் சினிமாவுக்குள் வந்தபோது தானும் விஜய் சேதுபதியும் மட்டுமே எந்த பின்புலமும் இல்லாத அவுட்சைடர்களாக இருந்ததாகவும், டிவியிலும் மிமிக்ரியிலும் இருந்த ஒருவர் எப்படி ஹீரோவாக முடியும் என்ற கேள்வி எழுந்தபோது, மக்கள் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தன் சொந்தக்காரராக ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார். தனக்கு எல்லாவற்றையும் வழங்கி உயர்த்திய மக்களுக்கு ஏதாவது திருப்பிச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே அறக்கட்டளை தொடங்கியதாகக் கூறிய அவர், தமிழ்நாடு முழுவதும் தான் மட்டுமே தனித்துச் செயல்பட முடியாது என்பதால் ரசிகர்களாகிய நீங்கள் தரும் பலத்தைக் கொண்டு நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
