CRIME
யாருசாமி நீங்க..? “வெறும் 36 நிமிடங்களில் ₹5 கோடி சுருட்டல்” நள்ளிரவில் ஷோரூம் ஷட்டரை உடைத்து… கடை ஓனருக்கு பேரதிர்ச்சி கொடுத்த கும்பல்..!!
ஜெய்ப்பூர் பஜாஜ் நகர் பகுதியில் உள்ள டோங்க் ரோட்டில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்தின் சொகுசு கடிகார பிராண்டான ‘ராடோ’ (RADO) ஷோரூமில் அதிகாலை வேளையில் சுமார் 13 பேரடங்கிய கொள்ளை கும்பல் ஷட்டரை உடைத்து நுழைந்துள்ளது. வெறும் 36 நிமிடங்களில், சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான 251 சொகுசு கடிகாரங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ஜெய்ப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 1,100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கொள்ளை நடந்தபோது 3 நபர்கள் வெளியே நின்று கண்காணித்ததும், கொள்ளைக்குப் பின் தப்பிச் செல்லும்போது ஒரு கொள்ளையன் காயமடைந்து நொண்டியபடி தப்பிச் செல்வதும் பதிவாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், குற்றவாளிகளில் 4 பேர் பேருந்து மூலமாகவும், சிலர் ரயில் மூலமாகவும் ஹரியானா மற்றும் பிற இடங்களுக்குத் தப்பியோடியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கை விசாரிக்க 120 காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளையர்களின் தடயங்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட இந்த விலைமதிப்பற்ற கடிகாரங்களை நேபாளம், டெல்லி அல்லது காசியாபாத் போன்ற பகுதிகளில் விற்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுவதால், குற்றவாளிகளைப் பிடிக்கவும் கடிகாரங்களை மீட்கவும் நேபாளம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் தனிப்படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.
