LATEST NEWS
“இனி இவன் உலகப் ஃபேமஸ்..!” ஆஸ்திரேலியத் தீவில் விளையாடிய பையனுக்குக் கிடைத்த சர்வதேச அந்தஸ்து.. உலகையே வியக்க வைத்த 10 வயது சிறுவனின் அசாத்தியக் கண்டுபிடிப்பு..!!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் மர்பி விட்டோவ்சன் கண்டுபிடித்த ஒரு விசித்திர சிலந்தி, அதுவரை உலகிற்குத் தெரியாத ஒரு புதிய இனம் என்பதை விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து அந்தச் சிறுவனை உலக அறிவியல் வரலாற்றில் இடம்பிடிக்கச் செய்துள்ளனர். கடந்த 2020-ஆம் ஆண்டில் அவனது பெற்றோர் டாஸ்மேனியா கடற்கரையில் உள்ள ‘டீல் தீவில்’ பணிபுரிந்த போது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த மர்பி இந்த வித்தியாசமான சிறிய சிலந்தியைப் பார்த்துள்ளான். அதைக்கண்டு பயந்து ஓடாமல், லான்செஸ்டனில் உள்ள அருங்காட்சியக ஆராய்ச்சியாளர்களைத் தொடர்புகொண்டு ஆய்வுக்கு உட்படுத்தியதன் மூலம் மனிதகுலம் இதுவரை கண்டறியாத ஒரு புதிய “ஓநாய் சிலந்தி” இனம் அது என்பது கண்டறியப்பட்டது.
சிறுவனின் இந்த அசாத்திய ஆர்வத்தைப் பாராட்டும் விதமாக, அந்தப் புதிய சிலந்தி இனத்திற்கு அவனது பெயரைச் சேர்த்து ‘ஆர்டோரியோப்சிஸ் மர்பி’ என்று விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாகப் பெயரிட்டுக் கௌரவித்துள்ளனர். இந்தச் சிலந்தி வெறும் 5 மில்லிமீட்டர் அளவு மட்டுமே கொண்டது என்றும், மனிதர்களைக் கடித்தாலும் விஷத்தன்மையோ அல்லது பெரிய அளவில் வலியோ தராத ஆபத்தற்ற இனம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அறிவியல் கண்டுபிடிப்புகள் என்பவை அதிநவீன ஆய்வகங்களில் மட்டுமன்றி, குழந்தைகளின் தேடல் மற்றும் ஆர்வத்திலிருந்தும் பிறக்கும் என்பதை மர்பியின் இந்தச் சாதனை நிரூபித்துள்ளதாகப் பாராட்டி, சிலந்தியின் அறிவியல் பெயர் பொறிக்கப்பட்ட கேக் வெட்டி அவனுக்குப் பிரம்மாண்ட விழா கொண்டாடப்பட்டுள்ளது.
