LATEST NEWS
12 மாசம்… 1000 நிராகரிப்பு… வீழ்வேனென்று நினைத்தாயோ..? உலகையே உற்றுநோக்க வைத்த எட்வர்ட்டின்… ஒரு ‘சிங்கிள்’ LinkedIn போஸ்ட்..!!
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் எட்வர்ட் ஒயிட்ஹெட் வேலை இழந்து கடந்த 12 மாதங்களாக வேலையின்றி தவித்து வருகிறார். தொடர்ச்சியாகப் பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து, நேர்காணல்களில் பங்கேற்றும் அவருக்கு இதுவரை எந்த வேலையும் கிடைக்கவில்லை. “இன்றைய நாள் எளிதானதாக இல்லை” என்ற மனவேதனையுடன் தனது LinkedIn பக்கத்தில் அவர் பகிர்ந்த கதை, உலகம் முழுவதும் உள்ள பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தொடர்ந்து நிராகரிப்புகளைச் சந்திப்பது ஒருவரது தன்னம்பிக்கையை அசைத்துப் பார்க்கக்கூடியது என்றாலும், தனது குடும்பத்தினர் தன்மீது வைத்துள்ள நம்பிக்கையை நினைத்து அவர் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.
வேலை தேடுவதில் மட்டுமே முழு ஆற்றலையும் செலவிட்டால் மனதளவில் சோர்வு ஏற்படும் என்பதை உணர்ந்த எட்வர்ட், தனது திறன்களை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கினார். தனது சுயவிவரக் குறிப்பை பலமுறை புதுப்பித்ததுடன், நெட்வொர்க்கிங்கை வலுப்படுத்தினார். மேலும், சும்மா இருந்து கவலைப்படுவதை விட ஏதேனும் புதிதாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், இரு வேறு சாப்ட்வேர் புராஜெக்டுகளை சொந்தமாக உருவாக்கத் தொடங்கியுள்ளார். ஒரு நிறுவனத்தில் வேலை கிடைப்பது மட்டுமே வாய்ப்பு அல்ல; நாம் உருவாக்கும் புதிய முயற்சியும் எதிர்காலத்தில் நமக்கான பெரிய பாதையைத் திறக்கக்கூடும் என்ற நம்பிக்கையை இது அவருக்கு அளித்துள்ளது.
தன்னைப் போல நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக எட்வர்ட் தனது பதிவை முடித்துள்ளார். “வேலையில்லாமல் இருக்கும் இந்தக் காலம் மனதளவில் மிகுந்த சோர்வைத் தரும் என்பதில் சந்தேகமில்லை; ஆனால், நீங்கள் தனி ஆள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நம்பிக்கை இழக்காமல் உங்கள் உழைப்பைத் தொடருங்கள், சரியான வாய்ப்பு நிச்சயம் உங்களைத் தேடி வரும்” என்று அவர் ஊக்கமளித்துள்ளார். சவாலான காலக்கட்டத்தில் சோர்ந்து போகாமல் மன உறுதியோடு போராடும் இவரது கதை, அனைவருக்கும் ஒரு சிறந்த பாடமாக அமைந்துள்ளது.
https://za.linkedin.com/in/edwardwhiteheaddev?trk=public_post_embed_feed-actor-name
