LATEST NEWS
என்னையே கட்சியிலிருந்து தூங்குறீங்களா.? தோப்பு வெங்கடாசலம் எடுத்த அதிரடி முடிவு… தவெகவில் இணைகிறாரா..? பரபரப்பில் அரசியல் களம்..!!
திமுகவின் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்று அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருந்ததாலும், சமீபகாலமாக கட்சித் தலைமையின் செயல்பாடுகளை விமர்சித்து பேசி வந்ததாலும் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாககூறப்படுகிறது . இதனைத் தொடர்ந்து, ஈரோடு மத்திய மாவட்டக் கழக அமைப்பில் இருந்த பெருந்துறை மற்றும் பவானி ஆகிய தொகுதிகளை முறையே ஈரோடு தெற்கு, ஈரோடு வடக்கு மாவட்டங்களுடன் இணைத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதிமுகவில் முக்கியத் தலைவராக விளங்கிய தோப்பு வெங்கடாசலம், ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வருவாய்த்துறை அமைச்சராகப் பணியாற்றியவர் ஆவார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் சீட் மறுக்கப்பட்டதால் சுயேச்சையாகப் போட்டியிட்டு, பின்னர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக திமுகவில் இணைந்த அவருக்கு ஈரோடு மத்திய மாவட்டப் பொறுப்பு வழங்கப்பட்டது. எனினும், அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் திமுக வேட்பாளராகக் களம் கண்ட இவர், அதிமுக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சிப் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திமுகவிலிருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த ஊகங்கள் எழுந்துள்ளன. சட்டமன்றத் தேர்தல் தோல்வி மற்றும் மாவட்டப் பொறுப்பாளர் பதவி நீக்கம் போன்ற அடுத்தடுத்த அரசியல் மாற்றங்களால், கொங்கு மண்டலத்தின் முக்கிய முகமாக கருதப்படும் இவர் தனது அரசியல் எதிர்காலத்தைக் கருதி தவெகவில் ஐக்கியமாக திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
