LATEST NEWS
தவெகவில் திடீர் சஸ்பென்ஸ்..! மாமல்லபுரம் நட்சத்திர ஹோட்டலில் ரகசியமாகக் கூடும் எம்.எல்.ஏக்கள்… பின்னணி என்ன..?!
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள 5 நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்நிகழ்ச்சிக்கான நோக்கம் என்ன என்பது குறித்து எந்தவொரு வெளிப்படையான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. நம்மிடம் மட்டுமல்லாமல், சட்டமன்ற உறுப்பினர்களிடம்கூட கூட்டம் எதற்காகக் கூட்டப்படுகிறது என்ற விவரம் தெரிவிக்கப்படாமல், முதலமைச்சரைச் சந்திக்க உள்ளனர் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. இதனால், கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பும் சஸ்பென்ஸும் நிலவி வருகிறது. காலை முதலே சென்னையை வந்தடைந்த பல சட்டமன்ற உறுப்பினர்கள், ஹோட்டலுக்கு எப்போது வர வேண்டும் என்ற சரியான தகவல்கூட அறியாமல் காத்திருக்கின்றனர். முதலமைச்சர் வழக்கம்போல தலைமைச் செயலகத்திற்குச் சென்றுள்ளதால், அலுவலகப் பணிகள் முடிந்த பிறகு அவர் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சந்திப்புக்குப் பின்னால் பல முக்கியக் காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் தனிநபர் ஒருவரைத் தாக்கியதாக வீடியோ வெளியாகி கடும் சர்ச்சையில் சிக்கியுள்ள துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும், மற்ற எம்.எல்.ஏக்களை எச்சரிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடமும் கையெழுத்து பெறப்பட உள்ளதாகவும், மற்ற எம்.எல்.ஏக்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கத் திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.
இதற்கிடையே, தவெக ஆட்சி அமைத்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், வருகிற 13ஆம் தேதி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத்தில் கட்சிக்குத் போதுமான பலம் இருப்பினும், தவெக உறுப்பினர்களை விலை பேச கடந்த சில வாரங்களாகத் தீவிர முயற்சிகள் நடப்பதாக எம்.எல்.ஏ முஸ்தப்பா வெளிப்படையாகக் குற்றம்சாட்டியிருந்தார். எனவே, வரவிருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள எம்.எல்.ஏக்களைத் தயார்படுத்தவும், பிற கட்சியினரின் பேரம் பேசும் முயற்சிகளைத் தடுத்து அவர்களை ஒற்றுமையாக வைத்திருக்கவுமே இந்த ரகசிய நட்சத்திர ஹோட்டல் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
