LATEST NEWS
அதிமுக ஆபீஸிற்குள் நுழைய எடப்பாடிக்கு தகுதியில்ல.. இன்னும் 2 வருஷத்துல திமுகவுக்கும் இதே கதிதான்.. தவெக நிர்மல்குமார் பகீர் எச்சரிக்கை..!!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான சி.டி.ஆர். நிர்மல்குமார், தமிழக அரசியல் களம் குறித்துப் பரபரப்பான கருத்துக்களை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் தற்போது நடக்கும் இடைத்தேர்தல் என்பது ஒரு தொடக்கம்தான் என்றும், வரும் காலங்களில் அடுத்தடுத்து இன்னும் பல இடைத்தேர்தல்கள் வரப்போகின்றன என்றும் அவர் அதிரடியாகக் கூறியுள்ளார்.
தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நோக்கித் தனது விமர்சனக் கணைகளைத் தொடுத்த அவர், எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் நுழைவதற்கே தகுதியற்றவர் என்று மிகக் கடுமையாகச் சாடினார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைகளுக்கும் இலட்சியங்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டுச் செயல்படும் அவரை, அக்கட்சியின் உண்மையான விசுவாசிகள் மற்றும் தொண்டர்கள் எக்காரணத்தைக் கொண்டும் கட்சி அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் மேடையில் வலியுறுத்தினார்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் மக்கள் சேவையை மறந்து தங்களின் குடும்பச் சொத்துக்களைப் பாதுகாப்பதில்தான் குறியாக இருக்கின்றன என்று குற்றம் சாட்டினார். தற்போதைய அதிமுக தலைமை சுயநலத்தால் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது போலவே, இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஆளுங்கட்சியான திமுகவிற்கும் இதே போன்ற கதிதான் ஏற்படும் என்றும், அவர்கள் மக்கள் நம்பிக்கையை இழந்து முட்டுச்சந்துக்குச் செல்வார்கள் என்றும் நிர்மல்குமார் தனது உரையில் எச்சரித்துள்ளார்.
