LATEST NEWS
கடலூரில் ஒரே நேரத்தில் 12 பேர் மாயம்? சினிமாவை மிஞ்சும் கடத்தல் சம்பவங்களால் தமிழகத்தில் உச்சகட்ட பதற்றம் – அரசைச் சாடிய வானதி சீனிவாசன்…!!
தமிழகத்தில் அடுத்தடுத்து இளம்பெண்களும் குழந்தைகளும் காணாமல் போவது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன், கடலூர் மாவட்டத்தில் சில நாட்களில் மட்டும் 12 பேர் மாயமாகியுள்ளதாக வந்திருக்கும் செய்திகள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், செஞ்சி சிறுமி விவகாரத்தில் ஒரு மாதத்திற்கு மேலாகியும் துப்பு துலங்காததும், விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் முயற்சிகள் நடப்பதும் காவல்துறையின் மெத்தனப் போக்கையே காட்டுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாகக் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் கூடி வெறும் அறிக்கை விடுவதால் மட்டும் இதுபோன்ற குற்றங்களைத் தடுத்துவிட முடியாது என்று சாடிய அவர், குழந்தைகளின் பாதுகாப்பில் அரசு முற்றிலும் கோட்டை விட்டுவிட்டதாகக் கூறினார். அரசாங்கத்தின் இந்த அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்றும், இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு தமிழக அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
