LATEST NEWS
த.வெ.க எனும் ரீல்ஸ் கட்சி….! “குற்றவாளிகளை அமைச்சராக்கிவிட்டு இதுதான் மாற்று அரசியலா…?” வானதி சீனிவாசன் பகிரங்க எச்சரிக்கை….!!
சென்னை ஆலந்தூர் பகுதியில் கணவனை இழந்து தனியாக வசித்து வந்த பெண் ஒருவரின் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அப்பகுதியின் த.வெ.க வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவத்தைக் கடுமையாகச் சாடித் தனது எக்ஸ் (X) வலைதளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், இந்த விபரீதம் த.வெ.க எனும் ரீல்ஸ் கட்சியின் மீது விழுந்த மற்றுமொரு கரும்புள்ளி என்று விமர்சித்துள்ளார்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக, அதிகாரத்தில் இருக்கும் ஆளுங்கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களே பெண்களை இப்படி வன்புணர்வு செய்யத் துணிந்தால், அவர்களை நம்பிப் பெரும்பான்மை ஓட்டளித்த தமிழகப் பொதுமக்கள் எவ்வாறு அச்சமின்றி நிம்மதியாக வாழ முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். குற்றப் பின்னணி உடைய நபர்களை எல்லாம் தங்களது அமைச்சரவையில் அமர வைத்துக் கொண்டு, சொந்தக் கட்சி நிர்வாகிகளுக்குத் தவறுகள் செய்ய முழு சுதந்திரம் அளிப்பதுதான் த.வெ.க பேசும் மாற்று அரசியலா என்றும் அவர் சாடியுள்ளார்.
புதிய மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் த.வெ.க-வை ஆட்சியில் அமர வைத்த தமிழக மக்கள், தற்போது தங்களது முடிவை நினைத்து வருந்தும் அளவிற்கு அவர்களின் அராஜகங்கள் நாளுக்கு நாள் எல்லையை மீறிச் செல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, முதலமைச்சர் விஜய் அவர்கள் இனிமேலாவது தனது கட்சியைச் சேர்ந்த இத்தகைய குற்றவாளிகளைக் கட்டுப்படுத்தத் தவறினால், கூடிய விரைவிலேயே தங்களுக்குக் கிடைத்த மக்கள் அதிகாரத்தை இழக்க நேரிடும் என வானதி சீனிவாசன் எச்சரித்துள்ளார்.
