LATEST NEWS
அதிமுகவில் இருப்பவர்களால் இப்படிச் சொல்ல முடியுமா…? துரோகம் தவெக வில் இல்லை… அதிமுக வில்தான்…! துரோகிகளை அடையாளம் காட்டிய செங்கோட்டையன் பாய்ச்சல்..!!!
அதிமுக முன்னாள் நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போதும் தனது சட்டைப் பையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் இருப்பதைத் துணிச்சலோடு சுட்டிக்காட்டினார். இதனைத் தவெக தலைவர் விஜய் அனுமதித்ததாகக் குறிப்பிட்ட அவர், “அதிமுகவில் இருப்பவர்களால் இப்படிச் சொல்ல முடியுமா?” என சவால் விடுத்தார். மேலும், விஜய் தன்னை நேரில் அழைத்து, ஜெயலலிதாவின் புகைப்படத்தை சட்டைப் பையில் வைத்துக் கொள்ளுமாறு கூறியதாகவும், அதுவே தனக்கு மகிழ்ச்சி என்று தெரிவித்ததாகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து அதிமுகவின் தற்போதைய தலைமை மற்றும் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த அவர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் வழிநடத்திய வரை மட்டுமே அது உண்மையான இயக்கமாக இருந்தது என்றும், தற்போது எடப்பாடி பழனிசாமி கையில் இருப்பது வெறும் கார்ப்பரேட் கம்பெனி மட்டுமே என்றும் சாடினார். ஜெயலலிதாவை 21 நாட்கள் சிறையில் அடைத்தவர்களுடன் கூட்டணி வைக்கத் துடிப்பவர்கள்தான் சதிகாரர்கள் என்றும், உண்மையான துரோகம் தவெக-வில் இல்லை, அதிமுக-வில்தான் அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
திமுகவின் மறைமுக ஆதரவோடு ஈபிஎஸ் முதலமைச்சராக நீடிக்க நினைத்ததுதான் மிகப்பெரிய துரோகம் என்று குறிப்பிட்ட செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து தூக்கி எறியப்பட்ட தங்களைப் போன்றவர்களுக்கு தவெக தலைவர் விஜய் ஒரு நல்வழிகாட்டியாகத் தாங்கிப் பிடித்துள்ளார் என்றார். தவெக-வின் மிகச்சிறந்த தலைமையை ஏற்றுப் பலரும் தங்களை இணைத்துக் கொண்டு வருவதாகவும், கட்சியில் புதிதாக இணைந்த அனைவரையும் மனதார வரவேற்பதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
